Share via:
திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக திண்டுக்கல் நெய் நிறுவனம் மீது திருப்பதி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு மிகவும் பிரசித்தி பெற்றது. அந்த லட்டுக்களை தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்கு கொழுப்பு சேர்த்து கலப்படம் செய்யப்பட்டிருப்பதாக கடந்த சில நாட்களாகவே சர்ச்சை எழுந்தது. கடந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக புகார்கள் எழுந்தன.
இது கட்சியில் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்க நடக்கும் சதி என்று ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இக்குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்தார். ஆனால் தற்போதைய ஆந்திர முதல்வர், குற்றம் செய்தவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதற்கிடையில் தோஷம் கழிப்பதற்காக திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கோவில் பல்வேறு யாகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில் சர்ச்சைக்குள்ளான நெய்யை தமிழகத்தில் உள்ள திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் சப்ளை செய்ததாக கூறப்படுகிறது. அந்த கலப்பட நெய்யை விதிமுறைகளை மீறி திருப்பதி தேவஸ்தானத்திற்கு சப்ளை செய்து வந்ததாகக் கூறி அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் திருப்பதி தேவஸ்தானத்தின் கொள்முதல் பிரிவு பொது மேலாளர் முரளி கிருஷ்ணன் புகார் மனு அளித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டு வரும் நெய்யில் மாதிரிகளை பரிசோதிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்று தெரியவந்துள்ளது.