Share via:

கூட்டணி ஆட்சி என்று அழைப்பு கொடுத்ததும் தி.மு.க. கூட்டணியில்
இருந்து திருமாவளவனும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தங்கள் பக்கம் தாவி வந்துவிடும் என்று
கணக்கு போட்டார் நடிகர் விஜய். அவரது கணக்கு தப்புக்கணக்கு ஆனது. அதோடு, இப்போது ஒரே
ஒரு கட்சி மட்டுமே அவரது கூட்டணிக்கு வர வாய்ப்பு இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
தி.மு.க. கூட்டணி இப்போது மிகவும் வலிமையாக உள்ளது. எனவே, அங்கிருந்து
யாரும் வெளியே வரப்போவதில்லை என்பது உறுதி. அதேநேரத்தில் திமுகவை வீழ்த்த எடப்பாடி
பழனிசாமியும் பாஜகவுடன் இணைந்து பிரம்மாண்ட கூட்டணியை அமைக்கும் திட்டத்தில் கிட்டத்தட்ட
உறுதியாக இருக்கிறார். பா.ஜ.க. மற்றும் பா.ம.க. போதும் என்பதால் தான், கடந்த சட்டமன்றத்
தேர்தல் போலவே இப்போதும் விஜயகாந்த் கட்சியை வெளியேற்ற முடிவு செய்திருக்கிறார்.
அதிமுகவை நம்பியிருந்த தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் இல்லை என்று
வெளிப்படையாகவே கூறிவிட்டார். எடப்பாடி பழனிசாமியுடன்
கூட்டணி சேரலாம் என்ற நம்பிக்கையில் பாஜகவையும் பிரேமலதா பகைத்துக்கொண்டார். ராமதாஸ்
கூட்டணியில் இருக்கும்போது விஜய்காந்த் கட்சிக்கு கூட்டணியில் மதிப்பும் மரியாதையும்
இருக்காது. அதோடு, வட மாநிலத்தில் விஜயகாந்த் கட்சி கேட்கும் இடங்களும் கிடைக்காது.
ஆகவே, இப்போது பிரேமலதாவுக்கு ஒரே வாய்ப்பு விஜய் கட்சியாக மட்டுமே
இருக்கிறது. அங்கு போனால் சீட்டு கிடைக்கும் ஆனால், நோட்டு கிடைக்காது என்பது பிரேமலதாவுக்குத்
தெரியும். அதனால் தானே முன்வந்து கூட்டணி பேச்சுவார்த்தையில் இறங்காமல் அமைதி காக்கிறார்.
இப்போது இரண்டு கட்சிகளுக்கும் வேறு போக்கிடம் இல்லை. ஆகவே, இப்போதே கூட்டணியை முடிவு
செய்துவிட்டால் இரண்டு கட்சிகளும் இணைந்து பயணிக்கலாம் என்று தே.மு.தி.க. நிர்வாகிகள்
ஆசைப்படுகிறார்கள்.
இன்னமும் என்ன முடிவு எடுப்பது என்று புரியாமல் தடுமாறுகிறார்
விஜய். தி.மு.க.வும் அதிமுகவும் பிரமாண்ட கூட்டணியாக மோதினால் இரண்டாவது இடத்துக்கே
வாய்ப்பு இருக்காது. அதேநேரம் தனியே நின்றால், சீமானை விட குறைவான வாக்குகள் வாங்கினால்
ரொம்பவே அவமானமாகிவிடும். ஆகவே, பிரேமலதாவை எப்படியாவது சம்மதிக்க வைக்க விஜய் கெஞ்சுவார்
என்றே சொல்கிறார்கள். பார்க்கலாம்.