Share via:
மத்திய பா.ஜ.க. ஆட்சியில் அமர்வதற்கு ராம ஜென்ம பூமி விவகாரம் கை கொடுத்ததை யாரும் மறந்துவிட முடியாது. அயோத்தியில் மசூதியை இடித்துவிட்டு, அங்கு ராமருக்கு ஆலயம் எழுப்ப வேண்டும் என்பது பாஜகவின் கனவாக இருந்தது. அதையே தேர்தல் வாக்குறுதியாக கூறி ஆட்சியை பிடித்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பினை அடுத்து உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.
இப்போது 2024 தேர்தலை கணக்கிட்டு கிருஷ்ணர் பிறந்த மதுராவை பா.ஜ.க. குறி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. உத்தரப் பிரதேசத்தின் புனித நகரமாக கரு தப்படும் மதுராவில், கிருஷ்ணர் கோயிலின் ஒரு பகுதி முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பால் இடிக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
அவுரங்கசீப்பால் கட்டப்பட்ட மசூதியை இடித்து அங்கு கிருஷ்ண கோயிலை உருவாக்க வேண்டும் என்று இந்துக்கள் அமைப்பு போராடி வருகிறது. கிருஷ்ண ஜென்ம பூமி விவகாரம் தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இந்துக்கள் சார்பில் 18 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், மதுராவின் ஷாயி ஈத்கா மசூதிவில் களஆய்வு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்திய தொல்லியல் ஆய்வகம் மசூதியில் களஆய்வு நடத்தி புகைப்படங்கள் மற்றும் காட்சிப்பதிவுகளுடன் தனது அறிக்கையை அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதனை தங்களுக்குக் கிடைத்த வெற்றியாக பா.ஜ.க.வினர் கொண்டாடி வருகின்றனர். கிருஷ்ணர் கோயில் இருந்தது உறுதியாக நிரூபிக்கப்படும் என்றும், கிருஷ்ண ஜென்ம பூமியில் கோயில் அமைவது உறுதி என்றும் இந்துக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 2024 தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் பா.ஜ.க.வுக்கு இந்த கோஷம் அமோக ஆதரவை பெற்றுத்தரும் என்றும் கட்சித் தலைவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.