Share via:
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சம்பந்தப்படுத்தி பேசிய தனபாலுக்கு தடையும், அவதூறாக பேசியதற்காக அபராதமும் விதித்து உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
மறைந்த புரட்சித்தலைவி ஜெயலலிதா கோடை நாட்களில் தங்கி ஓய்வெடுக்கும் கோடநாட்டில் அவரது மறைவுக்கு பிறகு கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறின. அதைத்தொடர்ந்து இதுகுறித்தான வழக்கும் இன்றும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், கடந்த சில நாட்களுக்கு முன்பு இவ்வழக்கு தொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். இது குறித்த வீடியோக்கள் இணையத்தில் வைரலான நிலையில் பெரும் சர்ச்சை கிளம்பியது.
அந்த பேட்டிகளில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புப்படுத்தி தனபால் பல கருத்துக்களை முன்வைத்தார். இதைத்தொடர்ந்து தனபாலுக்கு தடை விதிக்கக் கோரியும், ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மானநஷ்டம் கோரியும் சென்னை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள நிலையில், தன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கிலும், அரசியல் எதிரிகளின் தூண்டுதலின் பேரிலும் தனபால் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார் என்றும் அவருக்கு தடைவிதித்தும் மானநஷ்டம் விதிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி டீக்காராமன், தனபாலுக்கு தடை விதித்தும், ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கவும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.