Share via:
வாரணாசியில் நடைபெற உள்ள காசி தமிழ்ச்சங்கமம் நிகழ்ச்சி தொடக்க விழாவுக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து வாரணாசி செல்லும் பயணிகளை ஆளுநர் ஆர்.என்.ரவி வழியனுப்பு, ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த தொடக்க விழாவில் மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் கலந்து கொண்டார்.
காசி தமிழ் சங்கமத்தை மத்திய அரசு முதன்முறையாக கடந்த ஆண்டு நடத்தியது. அதன் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் இசைஞானியின் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
அதன்படி இந்த ஆண்டு (2023) நடைபெற உள்ள காசி தமிழ் சங்கமம் 2.0நிகழ்விலும் பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றுகிறார். கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் இசை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு துறையைச் சேர்ந்தவர்கள் இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்ற உள்ளார்கள். மேலும் கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள், உணவுத் திருவிழா மக்கள் கலாச்சார நிகழ்ச்சிகளும் காசி தமிழ் சங்கமம் 2.0வில் இடம்பெறுகிறது.
இந்நிலையில் காசி தமிழ்ச்சங்கமம் 2.0 நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் மூலம் பயணிகள் பயணம் மேற்கொள்கின்றனர். அவர்களை ஆளுநர் ஆர்.என்.ரவி வழியனுப்பி வைத்து ரெயிலை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். 216 பேருடன் இந்த ரெயில் வாரணாசிக்கு பயணம் மேற்கொள்கிறது. மேலும் பலர் வாரணாசிக்கு பயணம் செல்ல உள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், ‘‘காசி மீண்டும் ஒருமுறை பழமையான கலாச்சாரங்களின் கொண்டாட்டமான சங்கமத்திற்கு மக்களை உற்சாகமாக வரவேற்க தயாராகிறது. மேலும் இந்நிகழ்ச்சி இந்தியாவின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு’’ என்று தனது வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார்.