Share via:
முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த கருணாநிதி சதுக்கத்தில் புத்தம்
புதிதாக ஏராளமான ஏற்பாடுகள் அட்டகாசமாக செய்யப்பட்டுள்ளன.
அண்ணா சமாதியில், “எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது”
எனப் பொறிக்கப்பட்டுள்ளது போன்று கருணாநிதி சமாதியில், “ஓய்வெடுக்காமல் உழைத்தவர் இங்கே
ஓய்வு கொண்டிருக்கிறார்” எனும் வாசகம் கலைஞரின் எண்ணப்படியே பொறிக்கப்பட்டுள்ளது. இங்கு
கருணாநிதி அமர்ந்து எழுதும் வடிவிலான சிலை வடிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் சதுக்கத்தின் முன்னே இருபுறமும், காங்கிரஸ் தலைவர் சோனியா
காந்தி, தமிழ்ச் செம்மொழி என ஒன்றிய அரசு ஏற்ற முடிவை தெரிவித்துப் பாராட்டி, கலைஞருக்கு
எழுதிய கடிதம் ஆங்கிலத்திலும், தமிழிலும் புத்தக வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல்,
சதுக்கத்தின் பின்புறம் கலைஞரின் புன்னகை பூத்த முகம் பொன்னிறத்தில் மிளிரும் வண்ணமும்
சுற்றிலும் மின்விளக்குகள் விண்மீன்களாக ஒளிரும் வண்ணமும் அமைக்கப்பட்டுள்ளன.
இதுமட்டுமல்லாது, கலைஞரின் சதுக்கத்தின் கீழே நிலவறைப் பகுதியில்,
கலைஞர் உலகம் எனும் பெயரில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு, கலைஞர் நிர்மாணித்த திருவள்ளுவர்
சிலை, குடிசை மாற்றுவாரியம் முதலியவை படங்களாகவும், தமிழ்த்தாய் வாழ்த்தும், தமிழ்த்தாய்
வாழ்த்து அரசு நிகழ்ச்சிகளில் பாடப்பட வேண்டும் என்று கலைஞர் கடந்த 1970ம் ஆண்டு பிறப்பித்த
அரசாணையும், தமிழ்த் தாய் வாழ்த்து மாநிலப் பாடல் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த
2021ம் ஆண்டு பிறப்பித்த அரசாணையும் அவர்களின் படங்களுடன் இடம்பெற்றுள்ளன
கலைஞரின் இளமைக் காலம் முதல், அவர் வரலாற்றில் இடம் பெற்ற நிகழ்வுகள்,
கலைஞரின் படைப்புகள், அவர் சந்தித்த போராட்டங்கள், நிறைவேற்றிய பல்வேறு திட்டங்கள்
தொடர்பான புகைப் படங்கள் கலைஞரின் எழிலோவியங்கள் எனும் அறையில் அமைக்கப்பட்டுள்ளன.
அதேபோல், இந்த சதுக்கத்தில் கலைஞர் எழுதிய நூல்கள் விற்பனைக்கு
வைக்கப்பட்டுள்ளதுடன், வரும் வழியில் தமிழர்களின் கலாச்சார மையம், வள்ளுவர் கோட்டம்,
பாம்பன் பாலம், ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முகப்புக் கட்டிடம், மெட்ரோ ரயில்,
அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆகிய கலைஞர் படைத்த நவீனங்களின் தோற்றம் வண்ண விளக்கொளியில்
அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கலைஞரின் பொன்மொழிகள் கற்பாறைகளில் தமிழிலும் ஆங்கிலத்தில்
பொறிக்கப்பட்டு நம் இதயத்திலும் பதியும் வண்ணம் அருமையாக அமைக்கப்பட்டுள்ளன.
எனவே, இதனை கண்டு ரசிப்பதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக அலைமோதுகிறார்கள்.