Share via:
தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் நவீன தமிழ்நாட்டின்
சிற்பி என அழைக்கப்படும் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று 2021ம் ஆண்டு
சட்டமன்றத்தில் அறிவித்தார். அதன்படி, கடந்த இரண்டு வருடங்களாக அண்ணாவின் நினைவிடத்தை
புதுப்பித்தும், கருணாநிதி நினைவிடமும் கட்டப்பட்டு வந்தன.
தற்போது கட்டிட பணிகள் முழுவதுமாக நிறைவடைந்துள்ளதையடுத்து இன்று
மாலை 7 மணிக்கு அண்ணா, கருணாநிதியின் நினைவிடம் முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்படவுள்ளது.
சுமார் 8.57 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த நினைவிடத்தில்
கலை, இலக்கியம், அரசியல் ஆகிய துறைகளில் கருணாநிதி முத்திரை பதித்ததன் அடையாளமாக உதயசூரியன்
போன்று முகப்பில் 3 வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, கருணாநிதி சதுக்கத்தின்
கீழே நிலவறைப் பகுதியில், “கலைஞர் உலகம்” எனும் பெயரில் ஓர் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
தேபோல் ‘கலைஞரின் எழிலோவியங்கள்’ எனும் அறையில், அவரது இளமைக் காலம் முதல் வரலாற்றில்
இடம் பெற்ற நிகழ்வுகள், படைப்புகள், போராட்டங்கள், நிறைவேற்றிய பல்வேறு திட்டங்கள்
தொடர்பான புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
உரிமைப் போராளி கலைஞர், அரசியல் கலை அறிஞர் கலைஞர், சரித்திர நாயகனின்
சாதனைப் பயணம் என தனித்தனி அறைகளில் கலைஞரின் பெருமை மற்றும் வரலாற்றை எடுத்துரைக்கும்
வகையில் புகைப்பட தொகுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த திறப்பு விழாவுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான
மக்கள் மற்றும் திமுக தொண்டர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக
சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்து 150 சிறப்பு பேருந்துகளை மாநகர போக்குவரத்து
கழகம் இயக்குகிறது. அதேபோல், கூடுதல் ரயிலும் இன்று இயக்கப்பட உள்ளது.
வரலாற்று சிறப்பு மிக்க இந்த விழாவுக்கு வரும் பொதுமக்கள் பாதுகாப்புக்காக
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் மேற்பார்வையில் தெற்கு மண்டல கூடுதல்
கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில் ஒரு இணை கமிஷனர், 3 துணை கமிஷனர்கள் கொண்ட
3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மெரினா பகுதியில் போக்குவரத்து
நெரிசலை கட்டுப்படுத்த கூடுதல் கமிஷனர் சுதாகர் தலைமையில் 400 போக்குவரத்து போலீசார்
பணியில் ஈடுபடுகின்றனர்.