News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

புத்தகம் படிப்பதையும் நூலகம் செல்வதையும் யாரும் விரும்புவதில்லை என்று ஒரு கும்பல் சொல்லிவரும் நிலையில், மதுரையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு ஒரே ஆண்டில் 10 லட்சம் பேர் வருகை புரிந்திருக்கிறார்கள் என்று தி.மு.க.வினர் பெருமைப்பட்டனர்.

அரசுத் துறை தேர்வுப் போட்டிகளுக்குத் தயாராகும் இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இது ஒரு நல்ல முன்னேற்றம், ஸ்டாலினின் வெற்றி என்று தி.மு.க.வினர் கொண்டாடிவரும் நேரத்தில், இதுகுறித்து சிவகங்கை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் வில்லங்கமான ஒரு கருத்து கூறியிருக்கிறார்.

அதாவது, ‘’கலைஞர் நூல்கத்திற்கு வருபவர்கள் புத்தகம் படிக்க வருகிறார்களா..? எத்தனை புத்தகம் படித்திருக்கிறார்கள் என்பதற்கு ஏதேனும் கணக்கு இருக்கிறதா? புத்தக வாசிப்புப் பழக்கம் குறைந்திருக்கும் நேரத்தில், அந்த கட்டிடத்தைப் பார்க்கவே வருகிறார்கள்’’ என்று கிண்டலடித்திருக்கிறார்.

சமீபத்தில், காங்கிரஸ் கட்சி தனித்தன்மையுடன் திகழவேண்டும், தி.மு.க.வை நம்பிக்கொண்டு இருக்கக் கூடாது என்று பேசியிருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவிகேஎஸ் இளங்கோவன் கடுமையான கண்டனம் தெரிவித்திருந்தார். ஆனாலும், அதன் பின்னர் வேண்டுமென்றே இந்த விவகாரத்தைப் பற்றி பேசியிருக்கிறார் கார்த்தி சிதம்பரம்.

கார்த்தி சிதம்பரம் அமலாக்கத்துறை வழக்குகளில் சிக்கியிருப்பதால், அதிலிருந்து தப்பித்து பா.ஜ.க.வில் சேர்ந்துகொள்வதற்காக இப்படி பேசுகிறாரா அல்லது காங்கிரஸ் கட்சியை உடைக்கும் முயற்சி நடக்கிறதா என்று கேள்வி எழுந்திருக்கிறது.

இந்த நிலையில் கார்த்தி சிதம்பரத்துக்கு தி.மு.க.வினர் கடுமையாக பதிலடி கொடுத்துவருகிறார்கள்.

‘’1000 கோடி செலவுல மோடி கட்டுன நாடாளுமன்றம் ஒழுகுதே அத பத்தி நீங்க ஏதாவது கேள்வி கேட்டீங்களா!?? ராகுல் காந்தி சாதியை பற்றி வன்மமாக பேசுன அனுராக் தாக்கூர பத்தி நீங்க ஏதாச்சும் பேசுனீங்களா!?? தமிழ்நாட்டுல அண்ணாமல, அண்ணாமலன்னு ஒருத்தர் இருக்காரே அவரு உங்க கட்சியையும் தலைவரையும் மோசமா எத்தனை தடவ பேசிருக்காரு அவர எதிர்த்து ஏதாவது பேசிருக்கீங்களா!?? Across the Aisle னு Indian Express ல உங்கள் தந்தை மரியாதைக்குரிய ப.சிதம்பரம் அவர்கள் வாரவாரம் கட்டுரை எழுதுறாரே அதையாவது வாசிப்பீங்களா!?? ஏன் கேட்கிறேன்னா, அதை வாசிச்சா மோடி அரசை எதிர்த்து நிறைய கேள்வி கேட்டுருப்பீங்க!?? இப்படி வீட்டுக்குள்ளயே உக்காந்து வீடு கட்டாதீங்க சார் !! வெளிய தெருவ போயி அரசியல் பண்ணுங்க’’ என்று விமர்சனம் செய்திருக்கிறார்கள்.

கார்த்தி சிதம்பரத்துக்கு சீட் கொடுக்க வேண்டாம் என்று உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் கூறிவந்த நிலையில், அவரை நிறுத்துவதற்கும் வெற்றிக்கும் உழைத்த தி.மு.க.வினருக்கு கார்த்தி சிதம்பரத்தின் நன்றிக்கடன் ரொம்ப சூப்பர் என்று உடன்பிறப்புகள் நொந்துபோகிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link