Share via:
காங்கிரஸ் கட்சிக்குள் கொஞ்ச நாட்களாக எட்டிப்பார்க்காமல் இருந்த
கோஷ்டி மோதல் மீண்டும் தலை தூக்கியிருக்கிறது. காமராஜர் ஆட்சி அமைக்க வேண்டும் என்று
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியது ஒரு பெரும் பிரச்னையாக உருமாறியது.
எனவே தி.மு.க. மேலிடத்திடம் சமாதானம் செய்யவேண்டிய நிலைமை உருவானது.
இந்த நிலையில் கார்த்தி சிதம்பரம் பேசிய பேச்சுக்கு எதிராக இவிகேஎஸ்.
இளங்கோவன் கடுமையான சூடு போட்டுள்ளார். ‘’தி.மு.க. இல்லை என்றால் முன்னாள் மத்திய அமைச்சர்
ப.சிதம்பரத்தின் மகனான காங்கிரஸ் வேட்பாளர் காத்தி சிதம்பரம் சிவங்கையில் டெபாசிட்
கூட வாங்கியிருக்க மாட்டார்’’ என்று கடுமையாகப் பேசினார்.
இதற்கு பதிலடி போன்று கார்த்தி சிதம்பரம், ‘’புதுக்கோட்டையில்
நடைபெற்ற காங்கிரஸ் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் நான் பேசிய 11 நிமிட முழு உரையையும்
கேட்டபின் தங்களது கருத்துக்களை பதிவிடுங்கள், முழுமையாகக் கேட்காமல் பேசலாமா?’’ என்று
இளங்கோவனை மீண்டும் வம்புக்கு இழுத்துள்ளார்.
அந்த கூட்டத்தில் கார்த்தி சிதம்பரம், ‘தமிழ்நாட்டில் காங்கிரஸை
வளர்க்க தனித்தன்மையோடு நம் காங்கிரஸ் கட்சி
செயல்படவேண்டும். மக்கள் பிரச்சினைகளை தீர்க்க முன்னின்று பேசவேண்டும். ஆட்சியில் பங்கெடுக்கும்
அளவு வளரவேண்டும்’ என்று தான் பேசியிருக்கிறார். நேரடியாக எங்கேயும் திமுகவை தாக்கவே
இல்லை. ஆனால், தி.மு.க. ஆதரவு நிலையில் இருக்கும் இளங்கோவன் போன்றவர்கள் காங்கிரஸ்
கட்சி இப்படியே பிச்சை எடுத்து சில சீட் ஜெயித்தால் போதும் என்ற மனநிலையில் இருப்பது
வேதனை என்று கார்த்தி சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
அதேநேரம், இளங்கோவன் ஆதரவாளர்கள், ‘’கூட்டணியில் இருந்து கொண்டு
தலைமை அனுமதி இல்லாமல் விமர்ப்பது பச்சை யோக்கியதனம். கூட்டணியைவிட்டு வெளியேறி தேர்தலில்
எல்லாம் சட்டசபை.. உள்ளாட்சி ..பாராளுமன்ற தேர்தல்களில் தனியாக போட்டியிட்டு வாக்கு
வங்கியை திரூபித்து விட்டு பேசுங்கள். இதை ஏன் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் சொல்லவில்லை…?
அப்படி பேசி இருந்தால் டெபாசிட் கூட வாங்க முடியாது என்பது தெரிந்து தானே அமைதியாக
இருந்தீர்கள்.
தமிழகத்தில் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணியை உடைப்பதற்கு பா.ஜ.க.
பல வழிகளில் சதி செய்துவருகிறது. அதற்கு சாதகமாக நடந்துகொள்ள வேண்டாம்’’ என்று விமர்சனம்
செய்துவருகிறார்கள்.
காங்கிரஸ் என்றால் கலாட்டா என்பது இப்போது தான் களை கட்டுகிறது.