Share via:
ஸ்ரீவைகுண்டம் பகுதியில் படகில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை கனிமொழி எம்.பி. மீட்டு வருவதால் அவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மீட்புப்படையினர் தென் மாவட்டங்களுக்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மழைவெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடும் பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் படகுகள் மூலம் பொது மக்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம், ஏரல் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி படகில் சென்று மக்களை மீட்டு வருகிறார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.
அதன்படி கனிமொழி கருணாநிதி எம்பி, தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன் இணைத்து பாதிக்கப்பட்ட மக்களை படகு மூலம் மீட்டார். அதைத்தொடர்ந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். இது தி.மு.க.வினர் மற்றும் பொது மக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது.