Share via:
இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் கனிமொழிக்கு முக்கிய அமைச்சர்
பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பெரும்பான்மை பெற முடியவில்லை என்றாலும்
மைனாரிட்டி ஆட்சியை மோடி அமைத்துவிட்டார்.
இந்த நிலையில் தி.மு.க.விற்கு நாடாளுமன்ற குழு தலைவர் உள்ளிட்ட
பொறுப்புகளை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வழக்கமாக டி.ஆர்.
பாலுக்குக் கிடைக்கும் தலைமைப் பொறுப்பு இந்த முறை கனிமொழி கைக்குப் போயிருக்கிறது.
இதனால் டி.ஆர். பாலு தரப்பு அப்செட் ஆகியிருக்கிறது.
ஸ்டாலின் அறிவிப்பு படி, மக்களவை, மாநிலங்களவை இரண்டு அவைகளுக்கும்
சேர்த்து நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவராக துணை பொதுச் செயலாளர் கனிமொழி நியமனம்
செய்யப்பட்டுள்ளார். மக்களவை குழுத் தலைவராக பொருளாளர் டி.ஆர் பாலுவும், மக்களவை குழு
துணை தலைவராக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தயாநிதி மாறனும், மக்களவை கொறடாவாக
துணை பொதுச் செயலாளர் ஆ.ராசாவும் நியமிக்கப்படுகின்றனர்.
மாநிலங்களவை குழு தலைவராக கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா,
மாநிலங்களவை குழு துணை தலைவராக தொமுச பேரவை பொதுச்செயலாளர் மு.சண்முகம், மாநிலங்களவை
கொறடாவாக சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் பி.வில்சன், இரு அவைகளின் பொருளாளராக கொள்கை பரப்பு
செயலாளர் ஜெகத்ரட்சகன் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.
சீனியரான டி.ஆர்.பாலுவுக்கும் தி.மு.க. தலைமைக்கும் இடையில் இருந்த
மனக்கசப்பும் இதன் மூலம் வெளியே வந்திருக்கிறது.