தீபாவளி திரைப்படமாக வெளியாகி தமிழகம் முழுக்க வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அமரன் படம் பார்த்துவிட்டு, அதனை ஸ்டாலின் ஆஹோ ஓஹோவென்று புகழ்ந்திருக்கிறார். இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகச் சித்தரிக்கும் இந்தப் படத்துக்கு கமல்ஹாசனின் பி.ஆர்.ஓ. போன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் செயல்படலாமா என்று கொதிப்பு எழுந்துள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் படத்தைப் பார்த்த முதல்வர் ஸ்டாலின், ‘’நண்பர் கலைஞானி  கமல்ஹாசனின் அன்பு அழைப்பை ஏற்று, நேற்று அமரன் திரைப்படம் பார்த்தேன். புத்தகங்களைப் போல் – திரைப்பட வடிவிலும் உண்மைக் கதைகளை இன்றைய இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது! தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களது வீரத்தையும் அர்ப்பணிப்பையும் உணர்வுப்பூர்வமாகப் படமாக்கியுள்ள இயக்குநர் ராஜ்குமார், மேஜர் முகுந்த் வரதராஜன் – திருமிகு. இந்து ரெபேக்கா வர்கீஸ் ஆகியோரது பாத்திரங்களைத் தங்களது நடிப்பால் சிறப்பாக வெளிப்படுத்திய தம்பி சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் அமரன் படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்’’ என்று தெரிவித்திருக்கிறா.

சிறுபான்மையினர் பாதுகாவலன் என்று கூறிக்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின், இஸ்லாமியர்களை தேச விரோதிகளாகச் சித்தரிக்கும் ஒரு படத்துக்கு எப்படி புரமோசன் கொடுக்கலாம், அவர் என்ன கமல்ஹாசனின் பி.ஆர்.ஓவா..?’ என்று இஸ்லாம் அமைப்பினர் கேள்வி எழுப்புகிறார்கள். அவர்கள், ‘’இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என்று குற்றம் சாட்டிய தீ காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தின் மறு பிரதி தான் (இரண்டாம் பாகம்) அமரன் திரைப்படம் தமிழக முதல்வர் இந்த படத்தை பாராட்டி இருப்பது மிகமிக கண்டனத்திற்குரியது இது தான் சமூக நீதியா, திராவிட மாடலா?’’ என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

கமல்ஹாசன் சொந்தத் தயாரிப்பு என்பதால் அவர் தேர்தலில் தி.மு.க.வுக்கு செய்த சேவைக்கு ஸ்டாலின் பதில் உதவி செய்திருக்கிறார் என்று தி.மு.க.வினர் சொல்லி வருகிறார்கள். எல்லாமே அரசியலாப் போச்சு என்பது தான் வருத்தமான விஷயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link