தசாவதாரம் படத்தில், ‘கண்டங்கள் கண்டு வியக்கும் உலக நாயகனே..’ என்று தனக்காகவே ஒரு பாடல் வைத்தவர், ‘ஆழ்வார்பேட்டை ஆண்டவா’ என்று தன்னைப் பற்றி பாட வைத்த கமல்ஹாசனுக்கு திடீரென்று ஞானோதயம் ஏற்பட்டு, ‘இனிமேல் உலகநாயகனே’ என்பது போன்ற பட்டங்கள் வேண்டாம் என்று அறிவிப்பு செய்திருப்பது, அவரது கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இன்று கமல்ஹாசன் விடுத்திருக்கும் அறிக்கையில், ‘என் மீது கொண்ட அன்பினால், ‘உலக நாயகன்’ உட்பட பல பிரியம் ததும்பும் பட்டங்களால் என்னை அழைக்கிறீர்கள். மக்கள் கொடுத்து, சக கலைஞர்களாலும் ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இப்படிப்பட்ட பாராட்டுச் சொற்களால் மகிழ்ந்திருக்கிறேன்; உங்கள் இந்த அன்பால் நெகிழ்ந்துமிருக்கிறேன்.

கலையை விடக் கலைஞன் பெரியவன் இல்லை என்பது என் ஆழமான நம்பிக்கை. கற்றது கைம்மண் அளவு என்பதை உணர்ந்தவனாகவும், தொடர்ச்சியான முன்னகர்வில் நம்பிக்கை கொண்டு உழைத்துயர்பவனாகவும் இருப்பதே எனக்கு உவப்பானது. அதனால் தான் நிறைய யோசனைக்குப் பிறகு, பட்டங்களையும் அடைமொழிகளையும் வழங்கியவர்களுக்கு எந்த மரியாதைக் குறைவும் ஏற்படாத வண்ணம் துறக்கிறேன்’’ என்று அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.

வெளிநாட்டுக்குப் படிக்கப் போன கமல்ஹாசனுக்கு எப்படி திடீரென ஞானோதயம் ஏற்பட்டது என்று அவருக்கு வேண்டப்பட்டவர்களிடம் விசாரித்தோம். ‘’அரசியலுக்கு விஜய் வந்திருக்கும் சூழலில் தன்னுடைய அரசியல் இனி எடுபடாது என்பதை கமல் நன்கு அறிந்திருக்கிறார். எனவே, தேர்தல் நேரத்தில் மட்டும் தி.மு.க.வுக்கு வேலை பார்த்துவிட்டு ஒதுங்கிக்கொள்வார். அதோடு, விஜய் விட்டுச்செல்லும் இடத்தைப் பிடிப்பதற்கு இதுவே நல்ல வாய்ப்பு என்று கருதுகிறார். முழுமையாக சினிமாவில் கவனம் செலுத்துவதற்காகவே இப்படி ஒரு அறிக்கை விட்டிருக்கிறார். எந்த பட்டத்துக்கும் விரும்பாத அஜித்துக்குக் கிடைக்கும் மரியாதை கமல்ஹாசனை ரொம்பவே சிந்திக்க வைத்திருக்கிறது…’’ என்கிறார்கள்.

கருணாநிதி கொடுத்த கலைஞானி பட்டமும் வேண்டாமா என்று தி.மு.க.வினர் கேட்கிறார்கள். அதேநேரம், அவரது ரசிகர்கள், ‘’உங்கள் அன்பு கட்டளையை மனம் ஏற்க மறுக்கிறது. மன்னிக்கவும், அந்த கடவுளே கூறியும் எங்கள் அன்பை அடக்க இயலாது. என்றென்றும், இந்த பூத உடலின் கடைசி மூச்சி உள்ள வரை ஆண்டவர் உலகநாயகனாகவே அழைக்கப்படுவார்’’ என்று சொல்கிறார்கள்.

நிம்மதியா இருக்க விடுங்கப்பா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link