Share via:
நாம் தமிழர் கட்சியில்
இருந்து காளியம்மாள் வெளியேறலாம் என்பதை நேரடியாகவே மீடியாவிடம் தெரியப்படுத்திவிட்டார்
சீமான். ஆனாலும், காளியம்மாள்
இன்னமும் எந்த முடிவும் அறிவிக்காமல் அமைதி காக்கிறார். இந்த நிலையில் சீமான் நிலைப்பாடுக்கு
எதிராகவும், ஆதரவாகவும் கட்சிக்குள் எக்கச்சக்க முட்டல் மோதல் நடக்கிறது.
காளியம்மாளுக்கு
ஆதரவாகப் பேசுபவர்கள், ‘’காளியம்மாள் கட்சியில்
ஏதும் தவறு செய்திருந்தால் வள்ளுவம்
சொல்வது போல நேரடியாகக் கடுமையாகச்
சாடியிருக்கலாம். காளியம்மாளால்
சிக்கல் ஏதும் உண்டாகியிருந்தாலோ, அல்லது
காளியம்மாளைப்பற்றி துரைமுருகனிடம் பேசியதால் சிக்கல் எழுந்திருந்தாலோ
அதனைத் தலைவன் என்ற முறையில்
சீமான் கொஞ்சம் இணக்கமாக அணுகியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். இளையர்களோடு
விளையாட்டாக, அரவணைப்போடு செல்லும் குணமுடைய சீமான்
இப்போது காளியம்மாள் விஷயத்தில் மட்டும் இறுக்கமாக
இருப்பது தேவையற்றது.
காளியம்மாள் கட்சியைவிட்டுப்
போகவிடக் கூடாது என்பது எம்மைப்
போன்ற பலரின் விருப்பம். கட்சியைவிட்டுப் போகிறவர்களில் கல்யாணசுந்தரங்களும் உண்டு; இராசீவ்காந்திகளும் உண்டு.
கல்யாணசுந்தரங்கள் பெருகக்கூடாது. அதைக் கட்டுப் படுத்தும்
பொறுப்புத் தலைமைக்கும் உண்டு. வளரும் தமிழியக்கத்தின்பால்
இந்தக்கவலை எமக்கும் பலருக்குமுண்டு..’’ என்று
பலரும் காளியம்மாளுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.
அதேநேரம், ‘’சீமான்
செய்வது தான் சரி. கட்சிக்கு என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்குத் தான் தெரியும்.
காளியம்மாளை உலக மக்களுக்கு அறிமுகம் செய்தவர் சீமான். காளியம்மாள் ஒரு சாதாரண மேடைப்
பேச்சாளர் மட்டும் தான். அவரை தலைவர் ரேஞ்சுக்கு உயர்த்தி சீமானை அவமானப்படுத்துகிறார்கள்.
அவர் விஜய் கட்சிக்கு அல்லது தி.மு.க.வுக்குப் போய் சீமானையும் நாம் தமிழரையும் அவமானப்படுத்துவார்.
எனவே, அவர் இங்கே என்ன மனநிலையில் இருந்திருப்பார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். காளியம்மாள்
கட்சிக்கு வேண்டவே வேண்டாம்..’’ என்கிறார்கள்.
காளியம்மாள் குறித்து
சமாதானப்பேச்சுக்கு சீமான் தயாராக இல்லையாம். பிசிறு வெளியேறியே தீரவேண்டும் என்று
உறுதியாக இருக்கிறார். இந்நிலையில் தி.மு.க.வினரும், ‘’கலைஞரையும் மகளிர் உரிமைத் தொகையையும்
ரொம்பவே அவமானப்படுத்தியவர் காளியம்மாள். ஆகவே, அவரை சேர்க்கவே வேண்டாம்’’ என்று கோரிக்கை
வைக்கிறார்கள்.
காளியம்மாளைச் சுற்றி
நடக்கிறது அரசியல் நாடகம்.