Share via:
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசனுக்கு தமிழ் திரையுலக நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
அரசியல், தமிழ் சினிமா என பன்முகத்தன்மை கொண்டிருந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு ‘கலைஞர் நூற்றாண்டு விழா’வுக்கான ஏற்பாடுகள் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.
அதன்படி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் இதற்கான ஆலோசனைக் கூட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் நடிகர்கள் சங்கம், பெப்சியில் உள்ள 24 சங்கங்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.ராமசாமி, செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சிமுருகன் ஆகியோர் ‘கலைஞர் நூற்றாண்டு விழா’வுக்கான அழைப்பிதழை நடிகர் ரஜினிகாந்திடம் கொடுத்து அழைப்பு விடுத்தனர். இந்நிகழ்ச்சியில் தான் நிச்சயமாக பங்கேற்கப் போவதாக ரஜினிகாந்த் உறுதியளித்துள்ளார். அதேபோல் மக்கள் நீதிமய்யக் கட்சியின் தலைவரும் உலகநாயகனுமான கமல்ஹாசனுக்கும், கலைஞர் நூற்றாண்டு விழாவுக்கான அழைப்பிதழ் வழங்கப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.