Share via:
சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஒரு சர்வதிகாரி என்று செய்தியாளர்கள் சந்திப்பில் அமெரிக்க அதிபர் பகிரங்கமாக குறிப்பிட்டு சொன்னது பரபரப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் ஜீ ஜின்பிங் அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது அமெரிக்க அதிபர் ஜோபைடன் மற்றும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் இருவரும் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகையில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல் சீன அரசு ஊடகம் தனது செய்திக் குறிப்பில், தைவான் தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து சீன அதிபர் ஜீ ஜின்பிங் வருத்தம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பின் போது, கேட்கப்பட்ட கேள்விக்கு சீன அதிபர் ஜின்பிங் ஒரு சர்வாதிகாரி என்று அமெரிக்க அதிபர் ஜோபைடன் பகிரங்கமாக தெரிவித்தார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
பொதுவெளியில் சீன அதிபரை, அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்த கருத்து தற்போது சர்வதேச நாடுகள் மத்தியில் பேச்சுபொருளாக மாறியுள்ளது. இந்தோனேசியாவின் பாலியில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜி 20 மாநாட்டில் இரு தலைவர்களும் சந்தித்துக் கொண்ட நிலையில், ஒரு வருடம் கழித்து இந்த சந்திப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

