Share via:
கடந்த முறை ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலோடு மகாராஷ்டிரா சட்டப்பேரவைத்
தேர்தலும் இணைத்து நடத்தப்பட்டது. ஆனால், இம்முறை பா.ஜ.க.வின் வசதிக்காக வரும் நவம்பரில்
மகாராஷ்டிரா தேர்தல் நடத்தப்படும் என்று தெரிகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த ஹரியானா,
ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி தரும் என்று எக்ஸிட் போல் முடிவுகள் காட்டும்
நிலையில், அதை கொண்டாடுவதற்குள் மகாராஷ்டிரா தேர்தலுக்கு ராகுல் காந்தி களம் இறங்கியிருக்கிறார்.
ஏனென்றால், இந்த தேர்தல் வெற்றியே நாடாளுமன்றத்தில் பெரும் தாக்கத்தை உருவாக்கும் என்று
சொல்லப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டு சுமார் 6 ஆண்டுகளாகும்
நிலையில், 10 ஆண்டுகளுக்கு பின்னர் அங்கு தேர்தல் நடைபெறுகிறது. அதேபோல், கடந்த 10
வருடங்களாக ஹரியானாவில் ஆட்சியில் இருந்த பாஜக, தற்போது அதன் அரியணையில் இருந்து இறங்கப்போவதாக
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.
இந்தியா டுடே-சிவோட்டர், நியூஸ் 14, ரிபப்ளிக், டயம்ஸ் நவ் உள்ளிட்டவை
வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ் கட்சியே பெரும்பான்மையுடன்
ஹரியானாவில் ஆட்சியமைக்கும் என கூறப்பட்டுள்ளது. அனைத்தும் காங்கிரஸ் கட்சியே 50 +
தொகுதிகளில் வெற்றி பெறும் என கணித்துள்ளன. இந்தியா டுடே காங்கிரஸ்: 50 – 58,
பா.ஜ.க: 20 – 28 என்றும் ரிபப்ளிக் காங்கிரஸ் கட்சி 55 – 62 என்றும் பாஜக: 18 – 24
என்றும் டயம்ஸ் நவ் : காங்கிரஸ்: 50 – 64 என்றும் பாஜக: 22 – 32, என்றும் குறிப்பிட்டுள்ளன.
கடந்த தேர்தலில் இந்த மீடியாக்கள் பாஜகதான் வெற்றிபெறும் என சரியாக கணித்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று காஷ்மீரில் தொங்கு சட்டப்பேரவை அமைய வாய்ப்பிருப்பதாகவே
பல கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. 90 தொகுதிகள் கொண்ட ஜம்மு காஷ்மீரில் எந்த
கட்சிக்கும் பெரும்பான்மை (46 தொகுதிகள்) கிடைப்பது கடினம் என கூறப்படுகிறது. மும்முனை
போட்டி நிலவுவதால் இங்கு தொங்கு சட்டப்பேரவை அமைய அதிக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.
இந்திய டுடே பா.ஜ.க.வுக்கு 27 – 32, காங்கிரஸ் கூட்டணிக்கு 40 – 48 என்றும் ஆக்சிஸ்
மை இண்டியா பா.ஜ.க.வுக்கு 24 – 34, காங்கிரஸ் கூட்டணிக்கு 35 – 45, என்றும் டைனிக்
பாஸ்கர் பா.ஜ.க.வுக்கு :20 – 25, காங்கிரஸ் கூட்டணிக்கு 35 – 40 என்றும் கணித்துள்ளது.
ஹரியானா தேர்தலில் இப்போதே யார் முதல்வர் என்று போட்டி நடக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் தலித் தலைவர்களில் ஒருவரான குமாரி செல்ஜா, காங்கிரஸ் மாநிலங்களவை
உறுப்பினர் ரன்தீப் சுர்ஜேவாலா, காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்வராக இருந்த பூபேந்திர
ஹூடா ஆகியோர் முதல்வர் ரேஸில் முன்னணியில் உள்ளனர்.
இந்த நிலையில் இந்த வெற்றி வாய்ப்புகள் குறித்து காத்திருக்காமல்
ராகுல் காந்தி மகாராஷ்டிரா மாநிலத்திற்கு விரைந்துவிட்டார். ஏனென்றால், இந்த மாநிலங்களில்
வெற்றி அடைவதை விட மகாராஷ்டிராவில் மாபெரும் வெற்றி அடைந்தால் மட்டுமே மத்தியில் ஆளும்
பா.ஜ.க.வை அசைக்க முடியும் என்று அங்கு கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார்.
இந்த கருத்துக்கணிப்புகளில் நம்பிக்கை இல்லை. நாங்களே ஹரியானா,
காஷ்மீரில் ஆட்சி அமைப்போம் என்று பா.ஜ.க. இப்போதும் உறுதியாகச் சொல்கிறது. என்ன நடக்கிறது
என்று பார்க்கலாம்.