Share via:
ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படம் இதுவரை 1,000 கோடி ரூபாய் வசூல் புரிந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து பாலிவுட் திரைத்துறையினர் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர்.
கோலிவுட் இயக்குனரான அட்லீ, முதல் முறையாக பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார். நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோன், நயன்தாரா, விஜய்சேதுபதி, பிரியாமணி, யோகிபாபு என நட்சத்திர பட்டாளமே ஒன்று சேர்ந்து நடித்த ஜவான் திரைப்படம் உலகமெங்கும் கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி வெளியானது. இத்திரைப்படத்தை ஷாருக்கானின் மனைவி கவுரி கான் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார்.
அதன்படி ஜவான் திரைப்படம் வெளியான 19 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.1,000 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பதான்’ திரைப்படமும் ரூ.1,000 கோடி அளவுக்கு வசூல் சாதனை புரிந்த நிலையில், ஜவான் திரைப்படமும் ரூ.1,000 கோடியை தாண்டியுள்ளது.
இதனால் அடுத்தடுத்து ரூ.1,000 கோடி வசூல் செய்த முதல் நடிகர் என்ற பெருமை தற்போது ஷாருக்கான் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
வெறும் 19 நாட்களிலேயே ரூ.1,000 கோடி வசூல் செய்துள்ள ஜவான் அடுத்தடுத்த நாட்களில் மேலும் பல கோடிகளை பாக்ஸ் ஆபிசில் வசூல் செய்யும் என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. கடந்த சில வருடங்களாக தோல்வியை மட்டுமே சந்தித்துக் கொண்டிருந்த பாலிவுட், தற்போது ஷாருக்கானின் பதான் மற்றும் ஜவான் திரைப்படங்களால் உற்சாகத்தில் துள்ளி குதித்து வருகிறது.

