Share via:
மழைநீர் வெள்ளம் 36 மணி நேர அளவுக்கு தேங்கியதால் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசமடைந்துள்ள செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது.
வரலாறு காணாத அதிகனமழை கொட்டித்தீர்த்த காரணத்தால் தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 4 மாவட்டங்களில் இன்னும் மழைநீர் வெள்ளம் வடியாமல் தேங்கியுள்ளது. மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய போது சாலைகள், தண்டவாளங்கள் நீருடன் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. மேலும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் கரையோ பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வெள்ளம் புகுந்து பயங்கர சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், மாற்றுத்திறனாளிகள் அலுவலகம், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களுக்குள் மழைநீர் புகுந்தது. கடந்த 36 மணிநேரமாக 7 அடி உயரத்துக்கு தேங்கியுள்ள மழைநீரில் மேஜை, இருக்கைகள், பீரோக்கள், கம்ப்யூட்டர், பிரின்டர் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் சேதமடைந்துள்ளது.
மீண்டும் பயன்படுத்த முடியாத அளவுக்கு முக்கிய ஆவணங்கள் மற்றும் பொருட்கள் சேதமடைந்துள்ளதுடன், அப்பகுதி முழுவதும் சேறும், சகதியுமாக காணப்பட்ட நிலையில், துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.