Share via:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊருக்கு செல்லும் பயணிகள் இதுவரை 70 ஆயிரம் பேர் அரசு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இம்மாதம் (நவம்பர்) 12ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை முன்னிட்டு மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக தமிழக போக்குவரத்துத்துறை சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டு அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டது. அதன்படி வருகிற 9ம் தேதி முதல் 11ம் தேதி வரையில் சென்னையில் தினசரி இயங்கும் 2,100 பேருந்துகளுடன் சேர்த்து 4,675 சிறப்பு பேருந்துகள் 3 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 10,975 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
அதேபோல் பிற ஊர்களில் இருந்து நவ.9 முதல் 11ம் தேதி வரை 5,920 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. பண்டிகை முடிந்த பின்னர் பயணிகளின் வசதிக்காக பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு பயணிக்க 13ம் தேதி முதல் 15ம் தேதி வரையில் தினசரி இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் சேர்த்து 3,167 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 9,467 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சொந்த ஊர் பயணத்திற்கான டிக்கெட் முன்பதிவு வேகமெடுத்துள்ள நிலையில் இதுவரையில் 70 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாகவும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 5.9 லட்சம் பேர் பயணம் மேற்கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.