Share via:
நீண்ட காலத்திற்குப் பிறகு காங்கிரஸ் கட்சியினருக்கு இப்போதுதான்
ரோஷம் வந்திருக்கிறது. கே.எஸ்.அழகிரி, ஜோதிமணி எல்லாம் திமுகவுக்கு எதிராகப் பேசும்
நேரத்தில் செல்வப்பெருந்தகை கை கட்டி அமைதி காப்பது, அந்த கட்சியினரை டென்ஷன் ஆக்கியிருக்கிறது.
செல்வப்பெருந்தகை குறித்து எடப்பாடி பழனிசாமி, ‘’காங்கிரஸ் மேலிடப்பொறுப்பாளரும், அழகிரியும் காங்கிரஸ்
கட்சிக்கு அதிக தொகுதிகள் வேண்டும், ஆட்சியில் பங்கு வேண்டும் என்று ஒரு கருத்தைச் சொல்கிறார்கள். ஆனால், செல்வப்பெருந்தகை
என்ன சொல்கிறார்..? ராகுல் காந்தியே ஆட்சியில் பங்கு
கேட்கவில்லை, நீங்களும் கேட்காதீர்கள் என்கிறார்,
உண்மையிலே காங்கிரஸ் கட்சி தொண்டராக இருந்தால், கட்சியின் மீது பற்று இருந்தால் இப்படி பேசும் எண்ணம் வந்திருக்குமா?
அவருக்கு திமுகவை தாங்கிப்பிடிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு
அவர் விசுவாசமாக இல்லை, ஆனால் திமுகவுக்கு விசுவாசமாக
இருக்கிறார், அவர் பல கட்சிகள் போய்விட்டு வந்தவர்…’’ என்று குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஆட்களை திமுகவில் சேர்த்த
செந்தில்பாலாஜிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருக்கிறார் ஜோதிமணி எம்.பி. அவரது
பதிவில், ‘’கூட்டணி தர்மம் என்பது இரண்டு பக்கமும் இருக்க வேண்டும். திமுக வின் மாவட்ட
செயலாளர், ஒரு முன்னாள் அமைச்சர் காங்கிரஸ் கட்சியை இப்படி பொதுவெளியில் அவமதிப்பதை
நாங்கள் எப்படிப் புரிந்துகொள்வது? கூட்டணியின் பெயரால் இதுபோன்ற அவமரியாதையை ஒருபோதும்
நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இப்படி நடப்பது இது முதல் முறையல்ல.
கூட்டணி என்பது ஒரு கொள்கை அடிப்படையில், பரஸ்பர புரிதல், ஒத்துழைப்பு,
நம்பிக்கை மற்றும் மரியாதையின் அடிப்படையில் உருவாக்கப்படுவது. எந்தச் சூழலிலும்
இதில் எதனோடும் சமரசம் செய்துகொள்ள முடியாது. கரூர் நாடாளுமன்றத் தொகுதியில்,
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் இதற்கு எதிர்வினையாற்ற வேண்டிய
,காங்கிரஸ் கட்சியின் சுயமரியாதையைக் காப்பாற்ற வேண்டிய கடமையும்,பொறுப்பும்
எனக்கு இருக்கிறது. இம்மாதிரியான அவமரியாதயை எளிதில் கடந்து போய்விட முடியாது. கூட்டணிக்குள்
இதுபோன்ற கசப்பான சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதுகுறித்து
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் அண்ணன் செல்வப் பெருந்தகை அவர்கள் மு.க.ஸ்டாலின்
அவர்கள். கவனத்திற்கு எடுத்துச் செல்வார் என்று நம்புகிறேன்.’’ என்று கொதித்திருக்கிறார்.
இந்த நேரத்தில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐக்கு மாறியிருப்பதும்
செல்வப்பெருந்தகைக்கு சிக்கலை உருவாக்கும் என்கிறார்கள். வசமாக மாட்டியிருக்கிறார்
செல்வப்பெருந்தகை. ஒரு காலத்தில் செந்திபாலாஜியும் ஜோதிமணியும் ஜோடியாக ஊர் சுற்றி
வந்தார்கள். அவரே காங்கிரஸ் கட்சிக்காக கொதிக்கும் நேரத்தில் செல்வப்பெருந்தகை அமைதியாக
இருக்கலாமா..?