Share via:
மாநாட்டு மேடையில் நடிகர் விஜய் பா.ஜ.க.வை மென்மையாகவும் தி.மு.க.வை
கடுமையாகவும் எதிர்த்துப் பேசினார். சீமானைக் கூட பெயரைச் சொல்லாமல் எதிர்த்துப் பேசினார்.
ஆனால், அ.தி.மு.க.வை ஒரு இடத்திலும் விமர்சனம் செய்யவில்லை. இன்னும் சொல்லப்போனால்
எம்.ஜி.ஆரை பாராட்டியே பேசினார். இதையடுத்து அ.தி.மு.க.வைப் பார்த்து அஞ்சுகிறார் விஜய்
என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் குஷியாக இருக்கிறார்கள்.
இது குறித்துப் பேசும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள், ‘’விஜயகாந்த்
கட்சியை உடைத்து அவரை ஓட்டாண்டி ஆக்கியவர் புரட்சித்தலைவி ஜெயலலிதா. இது எல்லோருக்கும்
தெரியும். அதனால் அ.தி.மு.க.விடம் அடங்கியே இருப்பார் விஜய். மேலும், அவரை மூன்று முறை
மண்டியிட வைத்ததும் எங்கள் கட்சி தான்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்த சுறா படம் மோசமான தோல்வியைத்
தழுவியது. இதையடுத்து அவரது காவலன் படம் ரிலீஸ் ஆவதற்கு சன் பிக்சர்ஸ் இடைஞ்சல் செய்தது.
அந்த நேரத்தில் ஜெயலலிதாவிடம் தஞ்சம் அடைந்தார் விஜய். அதனாலே காவலன் படம் ரிலீஸ் ஆகி
வெற்றியும் அடைந்தது.
அப்போது நடந்த தேர்தலில் ஜெயலலிதா வெற்றிக்கு அணில் போல உதவினேன்
என்று விஜய் கூறியதாலே அவரை இன்று வரை அணில் என்று பலரும் கிண்டல் செய்துவருகிறார்கள்.
இதையடுத்து தலைவா படம் எடுத்தார். அப்போது, அந்த படத்தின் தலைப்புக்குக் கீழே, ‘டைம்
டூ லீடு’ என்று ஒரு குட்டித் தலைப்பு வைத்திருந்தார். இது, அவரது அரசியல் வருகையைக்
காட்டுகிறது என்று எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து கொடநாடு போய் ஜெயலலிதாவிடம் விஜய்யும்
அவரது அப்பாவும் கெஞ்சிக் கேட்டு படத்தை ரிலீஸ் செய்தார்கள். ரிலீஸ் நேரத்தில் டயம்
டூ லீடு என்பது எடுக்கப்பட்டிருந்தது.
அடுத்த பஞ்சாயத்து எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நடந்தது. விஜய்
நடித்த சர்கார் படத்தில் ஜெயலலிதா இலவசமாகக் கொடுத்த மிக்ஸி, டேபிள் ஃபேன் போன்றவற்றை
வீசும் காட்சிக்கு எதிர்ப்பு எழுந்ததால் தியேட்டரில் படம் ரிலீஸ் ஆக முடியாத சூழல்
உருவானது. அப்போது கடம்பூர் ராஜ், செல்லூர் ராஜ் கிட்ட எல்லாம் கெஞ்சி ரிலீஸ் பண்ணாங்க.
இந்த பயம் காரணமாகத்தான் அதிமுக பற்றி விஜய் ஒரு வார்த்தை கூட பேசல. திமுக எதிர்ப்பு
மட்டுமே பேசிட்டு போய்ட்டார்’ என்கிறார்கள்.
இது உண்மையா என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆட்களிடம் கேட்டதற்கு,
‘’சும்மா காமெடி செய்யாதீங்க. அ.தி.மு.க. கட்சிங்கிறது செத்துப் போன பாம்பு. அதை யாராவது
அடிப்பாங்களா..?’’ என்று கிண்டல் செய்கிறார்கள்.