Share via:

அண்ணா பல்கலைக்கழக
மாணவி விவகாரத்தில் ஊரே பற்றி எரியும் நிலையிலும் அமைதியாக இருந்த நடிகர் விஜய் இன்று
கைப்பட ஒரு கடிதம் எழுதி ஆதரவு தெரிவித்தது மட்டுமின்றி கவர்னரையும் சந்தித்து நடவடிக்கைக்கு
அழுத்தம் கொடுக்கப்போவதாகத் தெரியவந்துள்ளது.
இன்று விஜய் எழுதியிருக்கும்
கடிதத்தில், ‘’அன்பு தங்கைகளே… நான் ஒரு அண்ணனாக மன அழுத்தத்திற்கு ஆளாகிறேன். பெண்களின்
பாதுகாப்பு குறித்து நம்மை ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும் எந்தப்பயனுமில்லை
என்பது தெரிந்ததே. எல்லா சூழல்களிலும் நிச்சயமாக நான் உறுதியாக நிற்பேன் அண்ணனாகவும்
அரணாகவும். எனவே, எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள்’ என்று
கூறியிருக்கிறார்.
இது மட்டுமின்றி,
மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக
ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவியை
ராஜ்பவனில் சந்தித்துப் பேச இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின்றன.
இந்த விவகாரத்தில் ஆளுநரை சந்திக்கும் முதல் அரசியல் தலைவர் நடிகர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஆளும்
தி.மு.க.வை சேர்ந்த உடன்பிறப்புகள், ‘’அண்ணா யுனிவர்சிட்டி ஆளுநரின் கட்டுப்பாட்டில்
தான் உள்ளது அவரிடம் போய் விஜய் என்ன சொல்லுவார்..? அண்ணா யுனிவர்சிட்டியில் உங்களுடைய
தலைமை காரணமாக சிசிடிவிகள் இயங்கவில்லை, சரியான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கவில்லை
என்று கேட்கப்போகிறாரா..?
பல்கலைக்கழக வேந்தரே
ஆளுநர் ரவி என்பது நடிகர் விஜய்க்குத் தெரியுமா..? அங்கு நிலவும் பாதுகாப்பு குறைபாடுகளுக்கு
காரணம் ஆளுநரின் கையாள் பதிவாளர் தான். அண்ணா பல்கலை உடபட பல பல்கலைக்கழகத்தில் துணை
வேந்தர்களை நியமனம் செய்யாமல் முட்டுக்கட்டை போட்டு-சிதைப்பதே ஆளுநர் ரவி தான். இதெல்லாம்
தெரியாமல் அவரிடமே நடவடிக்கை எடுக்கச்சொல்லும் விஜய் சூப்பரான நடிகர் தான்’’ என்று
கிண்டல் செய்கிறார்கல்.
அதற்கு விஜய் ஆதரவாளர்கள்,
‘’கவர்னரை எதிர்ப்பது போன்று நடிப்பது அவர் கொடுக்கும் டீ, பிஸ்கெட் சாப்பிடப் போவது
என்று இரட்டை வேடம் போடுவது நீங்களும் உங்கள் ஸ்டாலினும் தான்’’ என்று திருப்பியடிக்கிறார்கள்.