Share via:
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு குறித்த அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டதை தொடர்ந்து அரசியல் களத்தில் பரபரப்பு நிலவி வருகிறது. கட்சிக்கொடி குறித்த ரகசியத்தை வெளியிடுவேன் என்று ஏற்கனவே வெளியிட்டிருந்த நிலையில் முதல் மாநாட்டின் பொழுது கட்சியின் கொள்கை, கொடியின் விளக்கம், கட்சியின் நிலைப்பாடுகள் குறித்து தெரிந்து கொள்ளலாம் என்று ஆர்வமா ரசிகர்களும் தொண்டர்களும் காத்திருந்தனர்.
செப்டம்பர் 23ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் முதல்மாநாட்டை நடத்துவதற்கான அனுமதி கோரி விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.யிடம் மனு கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு புஸ்சி ஆனந்த் விளக்கமும் கொடுத்துவிட்டார். இருப்பினும் மாநாட்டிற்கான அனுமதி வழங்கப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்படுவதாக கொந்தளித்துப் போயுள்ளனர் விஜய் விசவாசிகள்.
இந்தநிலையில் விஜய்யின் ஜாதகப்படி மாநாட்டை வருகிற அக்டோபர் மாதம் 3ம் வாரத்தில் நடத்தலாம் என்று அவரது ஆஸ்தான ஜோதிடர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி அக்டோபர் மாதம் 20ம் தேதி முதல் 27ம் தேதிக்குள் மாநாடு நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மறுபடியும் மாநாட்டிற்கான அனுமதி கோரி மாவட்ட எஸ்.பி.யிடம் மனு கொடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அக்டோபர் 3ம் வாரத்திலாவது மாநாடு நடக்குமா? அதற்கு அனுமதி கிடைக்குமா? என்று பல்வேறு கேள்விகளை சுமந்தபடி கட்சிப்பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள் தொண்டர்கள்.
இதற்கிடையில் விஜய்யின் கட்சி முதல்மாநாட்டிற்கு அனுமதி அளிப்பதில் தி.மு.க.விற்கு என்ன பிரச்சினை என்று தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆதரவாக பேசியது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே போல் விடுதலை சிறுத்தைகள் சார்பாக நடைபெறும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்து அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனும் தி.மு.க. கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.