மக்களை தி.மு.க.வினர் இனிமேலும் ஏமாற்ற முடியாது. ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் பொங்கி எழுந்துவிட்டார்கள் என்பதற்கு உதாரணமே அமைச்சர் மீது சேறு வீசப்பட்ட சம்பவமே சாட்சி என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தி.மு.க. மீது கடும் தாக்குதல் கொடுத்தார். உடனடியாக பா.ஜ.க.வினர் பலரும், ‘’அமைச்சர் காரில் இருந்தபடியே ஆய்வு மேற்கொண்டதால் கோபமான மக்கள் பொன்முடி மீது சேறு வீசினார்கள் என்று தொடர்ந்து எழுதினார்கள். மேலும், கோபமாக இருக்கும் மக்கள் பொன்முடியின் ஃப்ளக்ஸ்களை கிழித்து எறிவதாகவும் எழுதியிருந்தார்கள். இவை எல்லாமே அண்ணாமலையின் திட்டமிட்ட செயல் என்று கோபமாகிறார்கள் தி.மு.க.வினர்.

இது குறித்து தி.மு.கவினர், ‘’வீடியோ அரசியல் செய்த அண்ணாமலை இப்போது சகதி அரசியலுக்கு முன்னேறியிருக்கிறார். இதைத் தான் லண்டனில் படித்து வந்தார் போல தெரிகிறது. தள்ளாத வயதிலும் பொன்முடி சேறு, சகதியில் இறங்கி ஆய்வுகள் மேற்கொண்ட நேரம், பின்பக்கம் இருந்து சேறு விசியிருக்கிறார். அவர் பா.ஜ.க. பிரமுகர் உத்தரவின் பேரிலே இதை செய்ததாகவும், பா.ஜ.க. ஆதரவாளர் என்றும் தெரியவந்துள்ளது. சிலருடைய தூண்டுதல் காரணமாக நடந்திருந்தாலும் சூழ்நிலை கருதி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை..’’ என்கிறார்கள்.  

இது குறித்து பேசிய அமைச்சர் பொன்முடி, ‘’விழுப்புரம் மாவட்டத்தில் சராசரியாக 55 சென்டிமீட்டரும், விழுப்புரம் நகரில் 63.5 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. 67 நிவாரண முகாம்களில் 4,906 பேர் தங்கி யுள்ளனர். தென்பெண்ணையாற்று கரையோரம் உள்ள திருக்கோவிலூர், திருவெண்ணெய்நல்லூர், விக்கிர வாண்டி பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும் 70 சதவீதம் மின் விநி யோகம் செய்யப்பட்டுள்ளது. மழைக்கு விக்கிரவாண்டி தாலுகாவில் 6 பேரும், திருவெண்ணெய்நல்லூர் தாலுகாவில் 2 பேரும், விழுப்புரம் தாலுகாவில் 5 பேரும், வானூரில் ஒருவர் என 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு முதல்வர் அறிவித்த ரூ. 5 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும். மாவட்டத்தில் 26 நெடுஞ்சாலைகள் பாதிக்கப்பட்டு அதில் 17 சாலைகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 9 சாலைகள் விரைவில் சரிசெய்யப்படும். மாவட்டம் முழுவதும் 80 ஆயிரம் ஹெக்டேர் விளை நிலங்கள் சேதமடைந்துள்ளது. பயிர்கள் என கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

நில உரிமையாளர்களுக்கு முதல்வர் அறிவித்த இழப்பீடு வழங்கப்படும். விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் தரைத்தளம் 2 அடி உயர்த்தப்பட உள்ளது. இதன்மூலம் வரும் காலங்களில் தண்ணீர் தேங்காத அளவுக்கு திட்டமிடப்படும். என் பின்புறம் சேற்றை வீசி அரசியல் ஆக்குவதற்காக செய்துள்ளனர். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் யார் பதிவிட்டுள்ளாரோ அவர் கட்சியை சார்ந்தவர்கள் என்பது உங்களுக்கே தெரியும். என் மேல் மட்டுமல்ல உடன் வந்த ஆட்சியர் உள்ளிட்டவர்கள் மீதும் சேறு பட்டுள்ளது. இதனை பெரிதுபடுத்தி அரசியலாக்க விரும்பவில்லை.

ரூ.6,000 இழப்பீடு அதிகம் அளிக்க வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மத்திய அரசிடம் பேசி கூடுதல் நிதி பெற்றுத்தர வேண்டும் என உங்கள் மூலமாக கேட்டுக்கொள்கிறேன்’’ என்று கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link