திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் விரிவாக்க பணிக்காக மேல்மா உட்பட 11 ஊராட்சிகளில் 3,174 ஏக்கர் விவசாய நிலங்களை கைப்பற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் சார்பில் கடந்த ஜூலை 2-ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்திவருகிறார்கள். இதற்காக அமைச்சரை சந்திக்க வந்த விவசாயிகளை நள்ளிரவில் நடுரோட்டில் போலீஸார் தவிக்க விட்டிருப்பது அனைத்து மட்டத்திலும் எதிர்ப்பைக் கிளப்பியிருக்கிறது.

இது குறித்து பேசுபவர்கள், ‘’ அமைச்சர் வேலு அவர்களின் வீட்டிற்கு 80க்கும் மேற்பட்ட மேல்மா கிராம மக்கள் தங்களின் கோரிக்கை கடிதத்தை கொடுக்க சென்றனர். இத்துடன் அவர்கள் மூன்று, நான்கு வாகனங்களில் நான்காவது முறையாக சென்னை வருகிறார்கள். ஆனால், இன்னும் ஒரு முறை கூட அவர்கள் அமைச்சர் அவர்களை சந்திக்கவில்லை. ஒவ்வொரு முறையும் காவல்துறையால் தடுக்கப்பட்டு, அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி கிளாம்பாக்கம் கொண்டு சென்று அங்கிருந்து இரவோடு இரவாக பேருந்து ஏற்றிவிடுகிறார்கள்.

மீண்டும் போராட்டக்காரர்கள் அமைச்சரை சந்திக்க வந்தார்கள்.  அமைச்சர் வீட்டில் இல்லை என்று போலீசாரால் செய்தி சொல்லப்பட்டு பிறகு அமைச்சர் ராஜா அவர்கள் உங்களை சந்திப்பார் என்று சொல்லப்பட்டு அனைவரும் தீவுத்திடல் பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர். பின்பு அங்கிருந்து குறிப்பிட்ட சிலர் மட்டும் அமைச்சர் ராஜாவை  சந்தித்துவிட்டு திரும்பி இருக்கிறார்கள்.

 ஆனால், சுமூகமான முடிவு எட்டப்படாததால் மீண்டும் அமைச்சர் வேலு அவர்களின் வீட்டிற்கு சென்று அவர் வந்த பிறகு சந்தித்து கோரிக்கையினை முன்வைத்த பிறகு தான் ஊருக்குச் செல்வோம் என முடிவெடுத்து இருக்கிறார்கள்.  ஆனால், தீவுத்திடல் வெளியே இருந்தவர்கள் அரசு பேருந்து கொண்டு உள்ளே ஏற்றப்பட்டு தற்போது கிளாம்பாக்கம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர் . இத்துடன் இவர்கள் இப்படி வந்து திருப்பி அனுப்பப்படுவது நான்காவது முறை. இப்போது வரை அந்த பகுதியின் அமைச்சராக விளங்கும் வேலு அவர்கள் இந்த மக்களை சந்தித்து எந்த பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை.

 சென்னையை விட்டு வெளியே போக மாட்டோம் என்று உறுதியாக இருந்த ஊர்மக்களை கைது செய்து மண்டபத்தில் வைக்கப்போகிறோம் என்று கூறி பேருந்தில் ஏற்றிய காவல்துறை நடு இரவில் நடு வழியில் பெண்களை இறக்கிவிட்டு சென்றிருக்கிறது. மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகளை செங்கல்பட்டில் அதிகாலை 1;30 மணிக்கு இறக்கி விட்டு சென்றுள்ளது.

காவல்துறை உங்கள் நண்பன் என்பதற்கு இது தான் அர்த்தமா..?  உங்கள் வீட்டு பெண்களை இப்படித்தான் வழியில் இறக்கிவிட்டு செல்வீர்களா? என்று கேள்வி கேட்கிறார்கள். பதில் சொல்லுங்கள் ஸ்டாலின்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link