Share via:
கருணாநிதி நாணயம் வெளியீட்டுக்குப் பிறகு பா.ஜ.க.வுடன் இணக்கமாக
ஸ்டாலின் இருந்துவருகிறார். அதே பாணியில் ராஜாஜி கட் அவுட் மூலம் பா.ஜ.க. கூட்டணியிலும்
இடம் போட்டு வைக்கிறாரா திருமாவளவன் என்று எக்கச்சக்க கேள்விகள் எழுந்துள்ளன.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் உளுந்தூர்பேட்டையில்
நடைபெறும் ‘மது – போதைப் பொருள் ஒழிப்பு மகளிர் மாநாட்டுத்’ திடலில் மூதறிஞர் ராஜாஜியின்
கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. மது விலக்குக்கைக் கொள்கையாகக் கொண்டவர் என்பதாலே அவருக்கு
கட் அவுட் வைக்கப்பட்டிருப்பதாக திருமாவளவன் கூறியிருக்கிறார்.
ஆனால் தி.மு.க.வினரோ, ‘’ஏற்கெனவே மதுவிலக்கு மாநாட்டுக்கு அழைப்பு
விடுத்து அ.தி.மு.க. அணியில் ஒரு துண்டு போட்டு வைத்திருக்கிறார். இப்போது ராஜாஜிக்கு
ஒரு கட் அவுட் வைத்திருப்பதன் மூலம் பா.ஜ.க. கூட்டணிக்கும் சிக்னல் கொடுக்கிறார்’’
என்று கொதிக்கிறார்கள். அதோடு ராஜாஜி யார் என்பதையும் அம்பலப்படுத்துகிறார்கள்.
அதாவது, ‘’”எல்லோரும் படிக்கப் போய்விட்டால் அவரவர் குலத்தொழிலை
யார்தான் செய்வது? எனவே சலவைத் தொழிலாளர்கள் யாரும் படிக்கக் கூடாது என்று கூறியவர்
ராஜாஜி. அதேபோல் மதுவிலக்கை கொண்டு வந்த காரணத்தால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுவிட்டது
என காரணம் கூறி அந்த நட்டத்தை ஈடுகட்டவே, கல்வி செலவைக் குறைக்கவேண்டியதாயிற்று என்று
சாக்குச்சொல்லி 1938ஆம் ஆண்டிலேயே 2500 பள்ளிகளை இழுத்து மூடியவர். அதேநேரம், பார்ப்பனர்கள்
வேதங்களை முறையாகப் படிக்க வேண்டும் என்பதற்காக 12 லட்ச ரூபாய் செலவில் வேத பாடசாலைகளை
அமைத்துக் கொடுத்த கல்வித் தந்தை’’ என்றெல்லாம் எடுத்துக்காட்டுகிறார்கள்.
இந்த விவகாரத்தில் அதிர்ச்சி அடைந்திருக்கும் விடுதலை சிறுத்தைகள்
கட்சியின் நிர்வாகிகள், ‘’திருமாவளவன் இது வரை ஒருபோதும் இத்தனை குழப்பமாக பேசியதில்லை.
அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி என்று அனைத்துப் பக்கமும் துண்டு போட்டு வைத்தால்
தி.மு.க.வில் அதிக இடம் பிடிக்க வாய்ப்பு இருக்கிறது என்று நினைத்து அரசியல் செகிறாரா
என்று புரியவில்லை. ராஜாஜி படம் போடுவதற்கு பா.ஜ.க.வினரே விரும்புவதில்லை, ஆனால், என்ன
தைரியத்தில் இதையெல்லாம் செய்கிறார் என்றே புரியவில்லை. தமிழக மக்களின் விரோதியான ராஜாஜியை
எப்படி முன்னிலைப்படுத்தலாம்”” என்று எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
மது விலக்கு என்று அரசியல் போதையில் இருக்கும் திருமாவளவன் முதலில்
தெளிவுக்கு வரட்டும்.