Share via:
உணவு, உடைக்கு அடுத்து
அடிப்படை உரிமைகளில் ஒன்றாக இருப்பது வீடு. வாடகைக்கு வீடு தேடும் குடும்பஸ்தர்களுக்கே
என்ன ஜாதி, என்ன மதம், எத்தனை பேர் என்றெல்லாம் விசாரணைக்குப் பிறகும் வீடு கிடைப்பது
குதிரைக் கொம்பு. இந்நிலையில், வேலை தேடி வரும் பெண்களுக்கு ஹாஸ்டல் கட்டிக் கொடுத்த
ஸ்டாலின் அரசு, இப்போது திருநங்கையருக்கு வீடு கட்டிக் கொடுத்திருப்பது பெரும் பாராட்டு
பெற்றுள்ளது.
இது குறித்து பேசும்
தி.மு.க.வினர், ‘’பெருநகரங்களில் வீடு
தேடி அலையும் போது சந்தித்த
சிக்கல்களை விட, சிற்றூர்களில், சிறிய
கிராமங்களில் வீடு தேடும்போது எதிர்கொள்ளும்
பிரச்சனைகள் மிக அதிகம். நேருக்கு
நேராகவே நீங்கள் என்ன ஆட்கள்
என்று கேட்பார்கள். உங்களுக்கெல்லாம் விடுறது இல்லைங்க என்று
நேரடியாகவே சொல்வார்கள்.
இது மாதிரியான ஒரு
சமூக சூழ்நிலையில், விளிம்பு நிலை மனிதர்களிலேயே
மிக விளிம்பு நிலையில்
இருப்பவர்கள் நரிக்குறவர் சமுதாயத்தினரும். திருநங்கைகளும். நரிக்குறவர் சமுதாயத்தினரை விட மிகவும் ஒதுக்கப்படுபவர்கள் திருநங்கைகள்.
அவர்கள் பிறந்த குடும்பங்களிலிருந்தே விரட்டப்படும்
சோகத்திற்கு உள்ளானவர்கள் திருநங்கைகள். நரிக்குறவர்களுக்காவது சுற்றம் உண்டு. திருநங்கைகள்
சுற்றத்தாலேயே விரட்டப்பட்டவர்கள். அவர்கள் பொது சமூகத்துடன்
கலப்பது மிக கடினமான காரியம்.
அவர்களை அணுகுபவர்களும் பாலியல் ரீதியாகவே அணுகுவார்கள்.
எனவே திருநங்கைகளுக்கு வீடு கிடைப்பது எல்லாம்
மிகக் கடினமான ஒன்று.
எல்லோருக்கும்
எல்லாமும் கிடைப்பது தான் திராவிட
மாடல் என்னும் கொள்கையில் செயல்பட்டு
வரும் ஸ்டாலின் அரசு, நரிக்குறவர்களுக்கும்,
திருநங்கைகளுக்கும் அவர்கள் வாழ்வாதாரத்துடன் இணைந்து
வசிக்கும்படி வீடுகளை கட்டிக் கொடுத்திருக்கிறது.
எந்த ஒரு அரசுமே ஒரு
திட்டத்தை கொண்டு வந்தால், அதன்
பயனாளிகள் நமக்கு வாக்கு செலுத்துவார்களா?
எவ்வளவு வாக்கு கிடைக்கும்? என்பதை
எல்லாம் உத்தேசித்து தான் திட்டம் எல்லாம்
கொண்டு வருவார்கள்.
ஆனால் ஸ்டாலின்
அரசுதான், வாக்குகள் அவர்களுக்கு இருக்கிறதா
இல்லையா என்று கூட யோசிக்காமல்
இதுபோல திட்டங்களை செயல்படுத்துகிறது. நரிக்குறவர்கள் இடம்பெயர்ந்து கொண்டே இருப்பார்கள். திருநங்கைகளிடம்
சரியான ஆதாரங்கள் இல்லாமல் வாக்குகள்
இருக்காது. ஆனாலும் அவர்கள் பொது
சமூகத்துடன் கலந்து வாழ வேண்டும்,
தமிழ்நாட்டின் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் எல்லா வசதிகளும், மரியாதைகளும்
அவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று
இந்த அரசு எண்ணுவதால் தான்
இது போன்ற திட்டங்கள்
சாத்தியமாகிறது.
விருதுநகர்
மாவட்டத்தில் இந்த குடியிருப்புகள் சிறப்பாக
அமைக்கப்பட்டுள்ளன. இந்த குடியிருப்புகள் அவர்களுக்கு
தங்கும் இடமாக மட்டும் இருந்துவிடக்
கூடாது, அவர்களின் வாழ்வாதாரமும் உறுதிப்படுத்தப்பட
வேண்டும் என்ற நோக்கில் இதனை
வடிவமைத்த விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர்
ஜெயசீலனுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
இது ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கட்டும். திருநங்கையருக்கு வீடும் பணியும் கிடைத்துவிட்டால்
அவர்கள் தவறான காரியங்களில் ஈடுபடுவதற்கு அவசியம் ஏற்படாது.