Share via:
நீதிமன்றம் உத்தரவு
கொடுத்துவிட்டாலும் உதயநிதியின் கார் ரேஸை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று ஒட்டுமொத்த
எதிர்க்கட்சிகளும் தொடர் குற்றச்சாட்டுகள் வைத்துவருகிறார்கள். வர்ணஜபம் நடத்தி பேய்
மழை, புயல் ஏற்படுத்தி இந்த போட்டியை நிறுத்தும் அளவுப் போயிருக்கிறார்கள்.
எதிர்கட்சியான அ.தி.மு.க.வினர்,
’ரேஸ் நடத்த பணம் இருக்குது, ரோடு போட மனம் இல்லையா?’’ என்று சென்னையின் குண்டுகுழியுமான
சாலைகளை எல்லாம் படம் எடுத்துப் போட்டுவருகிறார்கள். எதிர்கட்சித் தலைவரான எடப்பாடி
பழனிசாமி, ‘’விடியா ஆட்சியில் நடக்கும் கார் ரேஸால் சென்னையின் பிரதான மெரினா சாலையில்
ஆம்புலன்ஸ் செல்லக் கூட வழியில்லாத அளவு கடும் போக்குவரத்து நெரிசல்! தன் ஆடம்பர விளம்பரத்திற்காக,
ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் உயிர் போனாலும் பரவாயில்லை என்ற அளவிற்கும்
இறங்கிவிட்டதா இந்த ஆட்சி’’ என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
மாஜி அமைச்சர் ஜெயக்குமார்,
‘’கார் ரேஸ் நடத்தி மக்களை சிரமத்துக்கு உள்ளாக்கியிருப்பது உதயநிதியின் விளையாட்டுத்தனம்.
இதற்கு அளவே இல்லையா? ஒட்டுமொத்த மாநகராட்சி நிர்வாகமும் ரேஸ் நடத்தும் இடத்தில் முகாமிட்டுள்ளது.
அதனால் சென்னை முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது’’ என்று குற்றம்
சாட்டியிருக்கிறார்.
பா.ம.க. தலைவர் அன்புமணி,
‘’கார் பந்தயப் பாதையான தீவுத்திடலை சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்களின் பார்வையில்
பளிச்சென்று படும் வகையில் கிங்பிஷர் எனப்படும் மதுவகையின் விளம்பரங்கள் மிக அதிக அளவில்
வைக்கப்பட்டிருக்கின்றன. இத்தகைய விளம்பரங்கள் பார்வையாளர்களின் மனதில் மிக மோசமான
தாக்கத்தை ஏற்படுத்தும்; அந்த வகை மதுவை அருந்த வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்.
மது வகைகளுக்கு செய்யப்படும் இந்த மது விளம்பரமும், அதை கார்பந்தயத்தை நடத்தும் அமைப்பும்,
தமிழக அரசும் அனுமதித்திருப்பதும் கண்டிக்கத்தக்கது’’ என்று கண்டனம் பதிவு செய்திருக்கிறார்.
நாம் தமிழர் சீமான்,
‘’ஃபார்முலா பந்தயம் ஏற்பாடு செய்யும் அரசு, தமிழ்நாட்டில் தொடர்ந்து ஏற்படும் நச்சுப்
புகை கசிவினைத் தடுக்க ஆட்சிமுறை ஃபார்முலா ஏதாவது வைத்திருக்கிறதா?’’ என்று சுற்றுச்சூழல்
ஆர்வலராக கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இவர்களுக்கு எல்லாம்
பதிலடி கொடுக்கும் தி.மு.க.வினர், ‘’2 நாட்கள் நடக்கும் F4 கார் பந்தயம், சென்னைக்கு
பெருமை சேர்க்கக்கூடிய முன்னெடுப்பு. இதற்கு யாரெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்
என்பதனை கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும். இவர்களெல்லாம் திமுகவின் அரசியல் எதிரிகள்.
சென்னையில் நடத்தாமல் வேறு எங்காவது நடத்தினால், ஏற்படும் வியாபார லாபங்களும் இந்த
எதிர்ப்பிற்கு பின்னால் இருக்கலாம். ஆனால் வழக்கு தொடுத்தாலும், அவதூறு பரப்பினாலும்,
அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு, சாதித்துக் காட்டியிருக்கிறார் உதயநிதி’’ என்று கொண்டாடுகிறார்கள்.