News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

கரூரில் மரண எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையிலே விஜய் சட்டென விமானம் ஏறி சென்னைக்குப் பறந்துவிட்டார். இன்று நிதியுதவி அளித்துவிட்டு அடுத்தகட்ட சுற்றுப்பயணத்தை ஒத்தி வைத்திருக்கிறார். இந்த நிலையில் விஜய் கூட்டத்தில் ஏற்பட்ட மரணம் குறித்தும் அதன் பின்னணி குறித்தும் பல்வேறு சந்தேகம் உருவாகின்றன.

விஜய் எப்போது போவார் என்பது யாருக்கும் புரியாத புதிராக உள்ளது. இந்த நிலையில் விஜய் அரசியல் மற்றும் கோர மரணம் குறித்து புதிய பார்வை இது.

இந்தக் கோர மரணங்களுக்குப் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள நடிகரின் கட்சி மட்டுமே காரணமல்ல; அவரைப் பின்னின்று இயக்கும் சக்திகளும் தான் காரணங்கள். அவர்களோடு கூட்டுச் சேர்ந்து நேரலையில் காட்டித் தங்கள் வியாபாரத்தையும் அரசியல் தந்திரங்களையும் காட்டும் தொலைக்காட்சி ஊடகங்களும் தான் காரணம். நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது; கட்சி ஆரம்பிக்கக் கூடாது என்பதல்ல; ஆனால் அவர்களால் அரசியலின் அடிப்படைகளைக் கற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லை என்பதுதான் எப்போதும் நான் சொல்லும் வாதம்.

தென்னிந்திய மொழிகள் பலவற்றிலும் நடித்துத் தனது நடிப்புத் திறனைக் காட்டிய நடிகர் பிரகாஷ்ராஜ் அரசியல் தான் பேசுகிறார். அவர் பேசுவது மாநில அரசியல் அல்ல; தேசிய அரசியல். இந்திய நாட்டிற்கே தேவையான மாற்று அரசியல். ஆனால், தமிழின் நாயக நடிகர்களும் நடிகைகளும் பேச விரும்புவது மாநில அளவைத் தாண்டாத அரசியல்.

அவர்களின் சிந்தனை, ஈடுபாடு, கருத்தியல் வெளிப்பாடு சார்ந்து உருவான அரசியலை அவர்கள் பேசியதில்லை. பந்தயத்திடலுக்குள் ஓடும்படி தள்ளிவிடப்பட்டவர்களின் பதற்றத்தோடு அரசியலுக்குள் வருகிறார்கள். வரும்போதே தமிழ் மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தை மட்டுமே குறிவைக்கிறார்கள். மாநிலக் கட்சிகளையே விமரிசிக்கிறார்கள். நீண்ட காலமாகத் தமிழக அரசியலைத் தீர்மானித்துக் கொண்டிருக்கும் திராவிட இயக்கக் கருத்தியலையும் அதன் வழியாக உருவான தேர்தல் அரசியலையுமே திசைமாற்றம் செய்ய நினைக்கிறார்கள். இதனால் தான் நடிகர்களின் அரசியலைத் தேசியகட்சிகள்/ ஒன்றிய ஆட்சியாளர்கள் பின்னின்று இயக்குகின்றார்கள் என்று சொல்லத் தோன்றுகிறது.திராவிட இயக்கத்தை/ அதன் கருத்தியல் தலைமையாக இருக்கும் பெரியாரை வெறுப்பவர்களால் இயக்கப்படுகிறார்கள் என்கிறோம். மறைந்து நிற்கும் கைவிரல்களில் சுண்டுதலுக்கேற்பப் பேசும்/ஆடும் பொம்மைகள் என்று சொல்ல நேரிடுகிறது.

தனக்கெனதனது நடிப்புக்கென ஒரு பாணியைதிரைக்கதை வடிவத்தை உருவாக்கிக் கொண்டு அதே வழியில் தொடர்ந்து படங்களைத் தரும் நாயக நடிகர்களின் சினிமாக்கள் வணிக வெற்றியை உறுதி செய்துள்ளன. அதே நேரம் தங்கள் பாணியிலிருந்து விலகிய சினிமா ஒன்றில் நடிக்கும் ஆசையுடன் முயற்சி செய்யும் நடிகரின் விருப்பத்தை அவரது ரசிகர்களே ஒத்துக் கொள்வதில்லை. தோல்விப்படமாக ஆக்கிவிடுவார்கள்.

அத்தகைய சூத்திரம் ஒன்றை அரசியலுக்காகக் கண்டுபிடித்து கட்சி நடத்தும்போது அரசியலிலும் நிலைத்து நிற்கின்றார்கள். ஏழைப்பங்காளன்; பெண்களின் காவலன்; தாய்மார்களின் அன்புக்குரியவன்; சினிமாவில் சம்பாதித்த பணம் என்னிடம் இருக்கிறது. எனவே ஊழல் செய்யவேண்டிய அவசியமில்லை; உங்களின் ரத்தத்தின் ரத்தமாக இருப்பேன் எனக்காட்டிக் கொண்ட அரசியல் சூத்திரம் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களுடையது. அவர் உருவாக்கிய அதிமுகவிற்கு வேறுவிதமான அரசியல் பொருளாதாரக்கொள்கை எதுவும் கிடையாது. அதே சூத்திரத்தில் மாற்றமில்லாத ஒன்று விஜய்காந்தின் தேமுதிகவின் சூத்திரமாகவும் இருந்தது. தன்னைக் கருப்பு எம்ஜிஆர் என்று சொல்லி அவரது வாரிசாகக் காட்டினார். இப்போது தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழ்நாட்டில் சின்னக்குழந்தைகளை வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தானே தாய்மாமன் என்றார். விஜய்காந்த் எனது முன்னோடி என்றார். எம்.ஜி.ஆர்., விஜய்காந்த், விஜய்மூவரும் நம்பியது மதுரை மண்ணை.

இவர்களின் ஆசைகளுக்குத் தீனி போடுபவர்களாக இருக்கிறார்கள் அரசியலற்ற அரசியல் ஆய்வாளர்கள், நடிகர் அரசியல் என்பது தமிழ்நாட்டில்/ இந்தியாவில் அரசியலற்ற வாக்காளத்திரளை ( apolitical )உருவாக்கும் ஒன்று. அரசியலற்ற நடிகர் அரசியலை நேரடியாக ஒளிபரப்பும் காட்சி ஊடகங்களுக்கு அரசியலற்ற அரசியல் ஆய்வாளர்கள் தேவைப்படுகிறார்கள். கட்சி அரசியலில் சாய்வுகளற்றவர்கள் போலக் காட்சிதரும் இவ்வகை அரசியல் ஆய்வாளர்கள் நடிகர் அரசியலைக் கொண்டாடுபவர்களாகவும் இருக்கிறார்கள். சாதி அரசியலையும் வரவேற்கின்றார்கள். அதே நேரம் கருத்தியல் அரசியலுக்கு எதிராக நிற்கின்றார்கள். மொத்தத்தில் ஆபத்தானவர்கள்.

நடந்தவை கோர விபத்துகள் அல்ல. திட்டமிடாத கொலைகள் எனச் சட்டத்தின் மொழி எழுதினாலும், முட்டாள் தனமான ஒருவனின் சொல்லைக் கேட்டுக் கூட்டம் கூட்டிச் செய்யப்பட்ட படுகொலைகள் இது என்பதை மனச்சாட்சியுள்ள ஒவ்வொருவரும் சொல்ல வேண்டும். கூட்டங்கள் பற்றியும் கூட்டங்களில் பங்கேற்பது பற்றியும் விழிப்புணர்வுப் பாடங்கள் தேவைப்படுகின்றன. வெகுமக்கள் அரசியலில் திரளும் கூட்டத்தின் இயல்பு பற்றி கற்பிக்கும் திரைப்படங்கள் எடுக்கப்படவேண்டும். காட்சிப்படுத்தப் படவேண்டும். தமிழ்நாடும் தமிழ் மக்களும் காப்பாற்றப்படவேண்டும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link