Share via:
எழுதப்படிக்கத் தெரியாத வயதான விவசாயிகள் இருவரை அமலாக்கத்துறை
அதிகாரிகள் மிரட்டி துன்புறுத்திய குற்றச்சாட்டு குறித்து, தமிழக காவல் துறை விசாரணை
தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், திவாரியைப் போன்று மீண்டும் அமலாக்கத்துறை
அதிகாரிகள் கைது செய்யப்படும் சூழ்நிலை நிலவுவதாக சொல்லப்படுவதால், அரசியல் வட்டாரத்தில்
பரபரப்பு நிலவுகிறது.
பிரதம மந்திரி கிஷான் திட்டத்தில் உதவி பெறும் விவசாயிகளுக்கு
‘ஜாதி’ பெயரை குறிப்பிட்டு சட்டவிரோத பணம் பரிமாற்றம் சட்டத்தின் கீழ் சம்மன் அனுப்பிய
அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது டி.ஜி.பி.யிடம் அளித்த புகாரின் மீது நுங்கம்பாக்கம்
போலீசார் தனது விசாரணையை தொடங்கியிருக்கிறார்கள்.
முதற்கட்டமாக விவசாயிகள் தரப்பு வழக்கறிஞர் பிரவினாவிடம் போலீசார்
விசாரணை நடத்தினர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ராமநாயக்கன் பாளையம் பகுதியில்
10 ஏக்கர் நிலம் தற்போது கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் கட்டுப்பாட்டில் உள்ளது.
சேலம் இருப்பாலை பகுதியை சேர்ந்த பாஜ சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்
குணசேகரன், கண்ணையன் மற்றும் அவரது சகோதரன் கிருஷ்ணனுக்கு சொந்தமான 6.5 ஏக்கர் நிலத்தை
வாங்க முயற்சித்துள்ளார். நிலத்தை விற்பனை செய்வதற்கு சகோதரர்கள் மறுத்துவிட்டனர்.
ஆனால் பாஜ நிர்வாகி குணசேகரன், படிப்பறிவு இல்லாத ஏழைகளான கண்ணையன் மற்றும் கிருஷ்ணன்
ஆகியோர் நிலத்தை விற்பனை செய்ய முன்பணமாக 1 லட்சம் ரூபாய் பெற்றதாக போலி பத்திரம் தயாரித்து, அவரது
6.5 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஜூன் 22ம் தேதி கண்ணையன் மற்றும் கிருஷ்ணன்
ஆகியோருக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து சம்மன்
வந்தது. அந்த சம்மனில், ‘திரு.கண்ணன், ‘இந்து – பள்ளர்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது
இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
‘பள்ளர்’ என்ற ஜாதி பெயர் ‘தேவேந்திர குல வேளாளர்’ என்று மாற்றப்பட்டு
2 ஆண்டுகள் ஆன நிலையில், ஒன்றிய அரசு எப்படி பள்ளர் என்று ஜாதி பெயரை குறிப்பிட்டிருந்தது.
மேலும், சட்டவிரோத பணம் பரிமாற்றம் சட்டத்தின் கீழ் உங்களிடம் விசாரணை செய்ய வேண்டும்.
எனவே விசாரணைக்காக வரும் ஜூலை 5ம் தேதி சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு
ஆஜராக வேண்டும். நேரில் ஆஜராகவில்லை என்றால், 6.5 ஏக்கர் நிலத்தை நாங்கள் ஜப்தி செய்வோம்
என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதைதொடர்ந்து 2 விவசாயிகளுடன் கடந்த ஜூலை 5ம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில்
உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வழக்கறிஞர் பிரவினா ஆஜரானார். அப்போது விவசாயிகளான
கண்ணையன், கிருஷணன் ஆகியோரை மட்டுமே உள்ளே விசாரணைக்கு வரவேண்டும். உடன் யாரும் வரக்கூடாது
என்று கூறி, வழக்கறிஞர் பிரவினாவை அதிகாரிகள் உள்ளே அனுமதிக்கவில்லை.
இந்த விவகாரம் இப்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த விவகாரத்தில் பாஜவின் முக்கிய பிரமுகர்கள் அமலாக்கத்துறை அதிகாரிகளின் பின்னணியில்
இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. எனவே சம்மன் அனுப்பிய, அமலாக்கத்துறை உதவி இயக்குநர்
ரித்தேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் பிரபா, சந்திரன் உள்ளிட்டோர் மீது சட்டப்படி வழக்கு
பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார்.
இதற்கான விசாரணை தொடங்கியது. விவசாயிகளின் பெண் வழக்கறிஞரான
பிரவினாவிற்கு அனுப்பப்பட்ட சம்மனை தொடர்ந்து, போலீஸ் கேட்டிருந்த தகவலைக் கொடுதார்.
அடுத்த சில நாட்களில் அமலாக்கத்துறை அதிகாரிகளை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி
சம்மன் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். விசாரணைக்கு
அமலாக்கதுறை அதிகாரிகள் வருவார்களா… அப்படி வரவில்லை என்றால் அவர்களை காவல் துறை கைது
செய்யப்போகிறதா என்பதுதான் இப்போதைய ஹாட்.