Share via:
தவெக தேர்தல் பரப்புரைக்கு காவல்துறை போதிய பாதுகாப்பு தரவில்லை
என்று இன்று ஆனந்த், ஆதவ் அர்ஜூனா தலைமைச் செயலகத்தில் தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்து
மனு அளிப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நேற்றைய தினம் தவெகா பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசிக்
கொண்டிருக்கும் போது அருகில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து மது பாட்டில்
ஒன்று கூட்டத்திற்கு நடுவே வீசப்பட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. காயமடைந்த பெண்
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இதுகுறித்து விஜய் கட்சியினர், ’’மேடைகளில் பேசுவதற்குப் பதில்,
வீதிகளில் பாட்டில்களை வீசுவதுதான் உங்கள் அரசியலா? இத்தகைய கீழ்த்தரமான செயல்கள் மூலம்
தொண்டர்களை அச்சுறுத்தி விடலாம் என்று யாராவது நினைத்தால், அது அவர்களின் அறியாமையே
தவிர வேறில்லை. தமிழகத்தின் அமைதியான அரசியல் சூழலைச் சீர்குலைக்கத் துடிக்கும் இத்தகைய
திமுக சமூக விரோத சக்திகளை தேர்தல் ஆணையம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். காவல்துறையினர்
வேடிக்கை பார்க்காமல், இந்த வன்முறைக்குப் பின்னால் இருக்கும் மூளை எது? யாருடைய தூண்டுதலில்
இந்த அராஜகம் அரங்கேறியது? என்பதை உடனடியாகக் கண்டறிந்து அவர்களைச் சிறையில் அடைக்க
வேண்டும்…’’ என்று வேண்டுகோள் வைத்தனர்.
தவெகவிற்கு எதிரான ‘சதிச்செயல்’ என்று ஆதவ் அர்ஜூனா கொந்தளித்தார்.
உடனடியாக கைது செய்யவில்லை என்றால் மிகப்பெரும் போராட்டம் வெடிக்கும் என்று கூறினார்.
இந்த நிலையில் பாட்டில் வீசியவர்கள் கண்டுபிடிக்கப்படுள்ளனர்.
காவல்துறை விசாரணையில் பாட்டிலை வீசியதே தவெகவினர் எனத் தெரிய வந்திருக்கிறது. அவர்கள்
இருவரையும் கைது செய்திருக்கிறது காவல்துறை.
இதுகுறித்து பேசும் திமுகவினர், ‘’விஜய்க்கு வெயிலில் பிரசாரம்
செய்வதற்கு பெரிதாக விருப்பமில்லை. அதனால் இப்படி ஏதேனும் வன்முறை நிகழ்ந்தால், அதை
கணக்கு காட்டி வீட்டில் ஓய்வெடுக்கலாம் என்று நினைக்கிறார்.
73 வயதில், 5 வருட ஓய்வில்லா ஆட்சிக்குப் பிறகும் ஸ்டாலின் சுறுசுறுப்பாகத்
தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருக்கிறார். 71 வயதில் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டின்
மூலை முடுக்கெல்லாம் பயணம் செய்து பிரச்சாரம் செய்கிறார். 59 வயதில் சீமான் தொகுதி
வாரியாகத் தெருமுனைப் பிரச்சாரத்தில் தீவிரமாக இருக்கிறார். ஆனால் 51 வயதில் விஜய்
மட்டும் தன் சோம்பேறித்தனத்தை மறைக்க “இது திமுகவின் சதி. மார்ச் மாதம் திமுகதான்
அதிக வெயில் கொண்டுவந்திருக்கிறது என்றுகூட விஜய் குற்றம் சாட்டுவதற்கு வாய்ப்பு உண்டு”
என்கிறார்கள்.
