Share via:
ஏழைகளின் வ்லி என்றால் என்னவென்றே தெரியாதவர்களே மத்தியில் ஆட்சியில்
இருக்கிறார்கள். அதனால் தான், வெங்காயம் விலை ஏறுவது ஏன் என்று கேட்டால், நான் வெங்காயம்
சாப்பிடுவதில்லை என்று நிதியமைச்சர் அறிவிப்பு செய்தார். இந்த நிலையில் ஏழைகளின் கையில்
இருக்கும் கொஞ்சநஞ்ச தங்கத்தையும் சுருட்டும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியிருக்கிறது.
நகைக் கடன் மீட்டு திரும்ப வைக்கும் நடைமுறையில் ரிசர்வ் வங்கி
கொண்டுவந்திருக்கும் மாற்றம் கடுமையான சிக்கலை உண்டாக்கும் என்று நாம் தமிழர் சீமான்
முதல் நபராகக் குரல் கொடுத்திருக்கிறார். இது குறித்து சீமான், ‘’பொதுமக்கள் வங்கியில்
அடகு வைத்துள்ள நகைகளை முழுவதும் பணம் செலுத்தித் திருப்பி, மறுநாள்தான் மீண்டும் அடகு
வைக்க முடியும் என்ற ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறை ஏழை எளிய மக்களைக் கடுமையாகப்
பாதிக்கும் கொடும் அணுகுமுறையாகும்.
கந்து வட்டிக் கொடுமைகளிலிருந்து தப்பிக்கவும், அவசர அவசியத் தேவைகளுக்கும்
ஏழை எளிய மக்கள் உடனடி பண உதவி பெறுவதற்கு வங்கி நகைக்கடன்களையே பெரிதும் நம்பியுள்ளனர்.
குறைந்த வட்டியில் பாதுகாப்பான மற்றும் நம்பகமான கடன் பெறும் வழியாக இருந்த வங்கி நகைக்கடன்
முறையை, ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்புக் கடினமானதாக மாற்றியுள்ளதால் பொதுமக்கள்
மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனர். ரிசர்வ் வங்கியின் பழைய விதிமுறையின்படி, ஒவ்வொரு
ஆண்டும் வங்கிகளில் நகை அடகு வைத்ததற்கான வட்டியை மட்டும் செலுத்தினாலே, அதே நாளில்
நகையை மீட்டு மறு அடகு வைக்க முடியும். அதன் மூலம் குறைந்த செலவில் நகை ஏலம் விடப்படாமல்
ஏழை எளிய மக்கள் காப்பாற்றிக் கொள்ளவும் அவ்விதிமுறை பயனுள்ளதாக இருந்தது.
இதனால், தொடர்புடைய வங்கிகளுக்கு வட்டி தொகை முழுமையாகக் கிடைத்ததுடன்,
வட்டித்தொகை தொடர்ந்து கிடைப்பதற்கான வாய்ப்பாகவும் அமைந்து, வங்கிகளுக்கு லாபம் தருவதாகவும்
அந்நடைமுறை இருந்தது. ஆனால், ரிசர்வ் வங்கி தற்போது அறிவித்துள்ள புதிய விதிமுறையின்படி
நகைகளை அசல் மற்றும் வட்டியுடன் முழுமையாகச் செலுத்தி மீட்டு, நகையைத் திருப்பிய மறுநாள்தான்
மீண்டும் அதே நகைகளை அடகு வைத்துப் பணம்பெற முடியும். இதனால் கடன் வாங்கியவர்கள் முழுப்
பணத்தையும் திரட்ட வேண்டிய நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் ஏழை மக்கள் மீண்டும் கந்து வட்டி வாங்கி, மீள முடியாத கடன்
சுமையில் சிக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஆகவே, ஏழை எளிய மக்களை வாட்டி வதைக்கும்
வகையில் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வங்கி நகைக்கடன் குறித்த புதிய விதிமுறைகளை உடனடியாகத்
திரும்பப்பெற வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டுள்ளார். அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து
எதிர்க்க வேண்டிய விவகாரம் இது.