Share via:
தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சொல்வதையே நடிகர்
விஜய் செயல்படுத்துகிறார், விஜய்க்கென எந்த அரசியல் பார்வையும் பாதையும் இல்லை என்று
சமீபத்தில் ஒரு ஆடியோ வெளியாகி பரபரப்பை உண்டாக்கியது. இந்நிலையில் இன்று கூட்டப்பட்ட மாவட்டப் பொறுப்பாளர்கள்
கூட்டத்தில் நடிகர் விஜய் பங்கேற்கவில்லை என்பது அரசியல் அதிர்ச்சியாகியுள்ளது.
சென்னை பனையூரில் இன்று காலை தமிழக வெற்றிக்கழக மாவட்ட பொறுப்பாளர்கள்
கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் நியமனம் தொடர்பாகவும்,
கட்சி உட்கட்டமைப்பு குறித்தும் தவெக நிர்வாகிகள் ஆலோசனை நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவையடுத்து 105 முதல் 110 மாவட்ட செயலாளர்கள் தமிழகம்
முழுக்க நியமிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது.
ஆகவே, இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நடிகர் விஜய் நிச்சயம் பங்கேற்பார்
என்றே அனைவரும் கருதினார்கள். இதையடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் நிர்வாகிகள்
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்து சேர்ந்தார்கள். ஆனால், இடைவிடாத படப்பிடிப்பின்
காரணமாக விஜய் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று அறிவிக்கப்பட்டது.
ஆகவே, தமிழக வெற்றிக்
கழகத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை த.வெ.க பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தலைமையில்
நடைபெறுகிறது. விஜய்க்குப் பதிலாக புஸ்ஸி ஆனந்த் கட்சி நடத்துகிறார் என்பதை இந்தக்
கூட்டமே காட்டிக் கொடுத்துவிட்டது என்று விஜய்க்கு எதிராக தி.மு.க.வினர் கடுமையாக குற்றம்
சாட்டி வருகிறார்கள்.
சூட்டிங் இருக்கிறது என்றால் எதற்காக கூட்டத்தைக் கூட்ட வேண்டும்..?
முக்கியமான கூட்டத்தில் கூட விஜய் பங்கேற்கவில்லை என்றால் நிர்வாகிகளின் உண்மையான குரல்
எப்படி விஜய் காதுக்குப் போகும்..? பனையூர் பண்ணையார் போன்று வீட்டுக்குள் இருந்தே
அரசியல் செய்யப்போகிறாரா என்று அவரது கட்சியினரே ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள்.
இதையடுத்து, விஜய் கட்சியை வைச்சிருக்கார். விஜய்யை புஸ்ஸி ஆனந்த்
வைச்சிருக்கார் என்று மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகிறார்கள்.
இதற்கு விஜய் கட்சியினர், ‘’தமிழக வெற்றிக் கழகத்தில் ஒருமனதாக
தேர்ந்தெடுக்கப்படும் மாவட்டச் செயலாளர்கள் அனைவரையும் தனித்தனியாக விஜய் சந்தித்து
விரைவில் ஆலோசனை நடத்த உள்ளார். விரைவில் 100 மாவட்டச் செயலாளர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுகின்றனர்.
இன்று கழகத்தின் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் தேர்வு குறித்த ஆலோசனையை நடத்த
விஜய் உத்தரவின்படி ஆலோசனைக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த நிர்வாகிகளை விஜய் சந்திப்பது
அவசியம் இல்லை என்பதாலே அவர் வரவில்லை’’ என்று விளக்கம் கூறி வருகிறார்கள்.