Share via:
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக
சட்டப்பேரவையில் விவாதம் நடத்த வேண்டும் என்று அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கொண்டுவந்த
கவன ஈர்ப்பு தீர்மானம் இன்று அவையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன்படி, அண்ணா பல்கலை
மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதத்தில் கட்சியில்
ஒருவருக்கு பேச வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் ஆகியவற்றை கண்டிக்கும்
வகையில் சட்டமன்றத்திற்கு கருப்பு சட்டை அணிந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வருகை தந்தனர்.
ஆனால், அவர்கள் பேசியது தொலைக்காட்சியில் காட்டப்படவில்லை. அதேநேரம் கவர்னரை குற்றம்
சாட்டிய் கூட்டணிக் கட்சியினர் கோரிக்கைகள் காட்டப்பட்டன. அதன்படி, ‘’அண்ணா பல்கலை.,
மாணவி விவகாரத்தில் ஆளுநரே பொறுப்பேற்க வேண்டும். ஏனென்றால் ஆளுநர் தான் பல்கலைகழக
வேந்தர்” என்று கவன ஈர்ப்பு தீர்மானம் மீது விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க.,
த.வா.க, கொ.ம.தே.க. உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள்.
அண்ணா பல்கலை. விவகாரம் அரசியலாக்கப்படுவது மிகப்பெரிய கொடுமை
என்று சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் செல்வப்பெருந்தகை பேசினார். இதையடுத்து
பேசிய ஈஸ்வரன், ‘’அந்த சார்? என்பவர் ஆளுநராக இருந்தாலும் காவல்துறை கடுமையான நடவடிக்கை
எடுக்க வேண்டும்’ என்று ஆக்ரோஷம் காட்டினார். இதற்கு மாறாக, ‘’அண்ணா பல்கலை. விவகாரத்தில் அரசு
முழு பொறுப்பேற்க வேண்டும்’’ என்று பாஜக எம்.எல்.ஏ.காந்தி வேண்டுகோள் வைத்தார்.
அதேநேரம், கவர்னருக்கு
எதிராக முன்னாள் தி.மு.க. அமைச்சர் சத்தியமூர்த்தி பேசிய விவகாரம் பெரும் எதிர்ப்பை
சம்பாதித்துள்ளது. ராமநாதபுரம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும் தி.மு.க.
மாவட்ட அவைத் தலைவருமான சத்தியமூர்த்தி, ‘’முதல்வர் ஸ்டாலின் கண் ஜாடை காட்டியிருந்தால்
வெளிநடப்பு செய்த கவர்னரின் கோட், சூடை எல்லாம் கிழித்து அவரை அண்ட்ராயரோடு விரட்டியிருப்போம்’’
என்று பேசியிருக்கிறார்.
இதற்காக சத்தியமூர்த்தியை
கைது செய்ய வேண்டும் என்று பா.ஜ.க.வினர் கோபம் காட்டுகிறார்கள். ‘கவர்னரை வெளிப்படையாக, பொதுவெளியில் மிரட்டிப் பேசியிருக்கும் திமுக
முன்னாள் அமைச்சருக்கு கடும் கண்டனங்கள். ஜனநாயக
நாட்டில் கருத்துச் சுதந்திரம் எல்லோருக்கும்
உண்டு. ஆனால், ஜனநாயக அமைப்புகளின்
மரியாதையை கெடுக்கும் வகையில் அநாகரிகமாக பேசியது
ரொம்பவே ஆபத்தானது. மாநிலத்தின் முதல் குடிமகனான கவர்னர்
அவர்களை மிரட்டும் தைரியம் எங்கிருந்து
வந்தது? மக்களாட்சி மரபுக்கு எதிரான இந்த
செயலை முதல்வர் ஸ்டாலின்
ஆதரிக்கிறாரா? அரசியலில் ஒழுக்கமும், மரியாதையும்
பேணப்பட வேண்டும் என்ற அடிப்படை
கூட தெரியாத முன்னாள்
அமைச்சர் சத்தியமூர்த்தி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.’’
என்று பா.ஜ.க.வினர் கோரிக்கை வைக்கிறார்கள்.