Share via:
தொடர்ந்து தோல்விகளை சந்தித்துவரும் எடப்பாடி பழனிசாமியிடம், ஒன்றுபட்ட
அ.தி.மு.க. வேண்டும் என்று மாஜிக்கள் சிலர் குரல் கொடுத்து வருகிறார்கள் என்று தினம்
தினம் செய்திகள் வெளியாகின்றன. இந்த நிலையில் திடீர் என ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருக்கும்
எடப்பாடி பழனிசாமி, ’2026 தேர்தலில் வலுவான கூட்டணி அமையும்’ என்று எடப்பாடி பழனிசாமி
உறுதி கொடுத்திருக்கிறார். இதன் அர்த்தம் பா.ம.க.வுடன் பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது
என்கிறார்கள்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை முடிந்ததுமே அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு
நடைபெறும் என்று கூறப்பட்டு வந்தது. அ.தி.மு.க.வில் மாஜி அமைச்சர்கள் அதிருப்தி என்றும்
கூறப்பட்டது. இந்த பேச்சுக்களை திசை திருப்புவதற்காக, மக்களவைத் தேர்தல் முடிவுகள்
குறித்துதொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் பழனிசாமி நேற்று முதல் 19-ம் தேதி வரை
சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமைஅலுவலகத்தில் ஆலோசனை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய
தொகுதி நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் ஆகியோருடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இக்கூட்டத்தில், ‘‘சட்டப்பேரவை தொகுதி அளவில் எங்கெங்கு குறைவான
வாக்குகள் பதிவாயின? எந்தெந்த நிர்வாகிகள் தேர்தலில் சரியாக வேலை செய்யவில்லை? திமுகவினருடன்
கைகோர்த்து, கட்சிக்கு எதிராக வேலை பார்த்ததுயார்?” என்று பழனிசாமி கேள்வி எழுப்பியதாகக்
கூறப்படுகிறது.
இதற்கு பதிலளித்த நிர்வாகிகள் ‘‘இந்த தேர்தலில் வலுவான கூட்டணி
அமையவில்லை. மகளிர் உரிமைத் தொகை, மகளிருக்கு இலவசபேருந்து பயண வசதி போன்ற அரசின் திட்டங்களும்
அதிமுக வாக்கைஇழக்க காரணம். வரும் 2026 தேர்தலில் வலுவான கூட்டணி அமைக்க வேண்டும்’’
என்று தோல்விக்குக் காரணம் அடுக்கினார்கள்.
ஒன்றுபட்ட அ.தி.மு.க. இல்லை என்றால் அடுத்தடுத்த தேர்தல்களில்
ஜெயிக்கவே முடியாது என்று ஒரு சிலர் கருத்து கூறியதை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை.
கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் பற்றி பேச வேண்டாம் என்று தடை போட்டுவிட்டார்.
அதைத் தொடர்ந்து பழனிசாமிபேசும்போது, ‘‘2026 சட்டப்பேரவைத் தேர்தலில்
அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும். அப்பணியை கட்சி தலைமை பார்த்துக் கொள்ளும்.
கட்சி நிர்வாகிகள் கிளைக் கழக, மாவட்ட அளவில் மாதந்தோறும் இருமுறை கூட்டங்கள் நடத்தி
கட்சியை வலுப்படுத்த வேண்டும். கட்சியில் இளைஞர்களை அதிக அளவில் சேர்க்க நடவடிக்கை
எடுக்க வேண்டும். 2026 தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை’’ என்று கூறியதாகக் கூறப்படுகிறது.
பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது என்றாலும் 2026 தேர்தலில் அ.தி.மு.க.
கூட்டணிக்குத் திரும்ப பா.ம.க. சம்மதித்துவிட்டது. இதற்காகவே விக்கிரவாண்டி தேர்தலில்
அ.தி.மு.க. விட்டுக் கொடுத்தது. இதையே சூசகமாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்
என்று அ.தி.மு.க. நிர்வாகிகள் குஷியாகிறார்கள்.