Share via:
பாஜகவை பாசிசம் என்று வர்ணித்த விஜய், இப்போது தேசிய ஜனநாயக கூட்டணியில்
இணையாலாமா என்பது குறித்து விவாதம் நடத்தத் தொடங்கியிருக்கிறார்.
கடந்த காலங்களில் அதிமுகவும், பாஜகவும் அழைத்தபோது மறுத்த விஜய்,
இப்போது தானாகவே முன்வந்து கூட்டணிக்கு வருவதற்கு முக்கிய காரணம், வேட்பாளர் தேர்வு
குறித்த சிக்கல்கள் என்கிறார்கள். கட்சித் தலைமையின் நிபந்தனைப்படி, வேட்பாளர்கள் குறைந்தபட்சம்
5 கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டும், அதற்கான ஆதாரத்தையும் காட்ட வேண்டும் என்பதால்,
மா.செக்கள் ஆட்களைத் திரட்ட முடியாமல் திணறியுள்ளனராம்.
234 தொகுதிகளுக்கும் வேட்பாளர் நிறுத்த முடியவில்லை என்றால் அவமானம்
என்பதாலே கூட்டணிக்குச் செல்லும் முடிவுக்கு தவெக வந்துள்ளதாகத் தெரிகிறது. முன்பு
கூட்டணியை உதாசீனப்படுத்திய தவெக, இப்போது பலவீனமாகத் தெரியாமல் இருக்க, அமைச்சரவையில்
இடம், விஜய்க்கு துணை முதல்வர் பதவி போன்ற கோரிக்கைகளை முன்வைத்து சமாளிக்கலாம் என
நினைக்கிறதாம்.
ஆனால், அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி, ஆட்சி அதிகாரத்தில்
பங்கு இல்லை என்பதில் பிடிவாதமாக இருக்கிறார். பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை
அதிமுகவே பெறும் என்றும், அதற்கேற்பவே கூட்டணி கட்சிகளுக்குத் தொகுதிகள் ஒதுக்கப்படும்
என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாராம்.
பாஜக தரப்பிலும், விஜய் கூட்டணிக்கு வந்தே ஆக வேண்டும் என்று அழுத்தம்
கொடுக்கும் திட்டம் இல்லை என்று கூறப்படுகிறது. விஜய்யை கூட்டணிக்கு அழைத்த நிர்வாகியை
நீக்கியதும், நயினார், அண்ணாமலை, எல்.முருகன் ஆகியோர் விஜய்க்கு எதிராகப் பேசியதும்
இதற்குச் சான்றாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. ஆகவே, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தவெக
வந்தால், கொடுப்பதை வாங்கிக்கொண்டு போட்டியிடும் நிலைதான் ஏற்படும். கூட்டணியில் அதிமுக,
பாஜகவிற்கு அடுத்த மூன்றாவது கட்சியாகவே தவெக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கட்சி ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலே அவமானப்பட்டு நிற்கிறார் விஜய்.