Share via:

தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்த மாதம் ஒரு முறை மின் அளவு கணக்கீடு
திட்டத்தை ஸ்டாலின் விரைவில் செயல்படுத்தப் போகிறார் என்று வந்திருக்கும் செய்தி கட்சியினரையும்
பொதுமக்களையும் குஷிப்படுத்தியிருக்கிறது.
இன்று காணொலி வாயிலாக மக்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘ஒன்றிய
பாஜக அரசின் சதித் திட்டங்களுக்கு முதன்மை தடையாக இருப்பது தமிழ்நாடும், திமுகவும்தான்.
எந்த திட்டத்தை போட்டாலும் அதை முறியடிக்கும் வலிமை நம்மிடம் உள்ளது. நம்மிடம் இருந்து
வெற்றியை பறிக்க பல எதிரிகளை உருவாக்குவார்கள். ஒன்றிய பாஜக அரசின் சதித்திட்டங்களை
முறியடித்து 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவோம்’’ என்று பேசியிருந்தார்.
இது குறித்து பேசும் தி.மு.க.வினர், ‘’சட்டப்பேரவை தேர்தல் அடுத்த
ஆண்டு நடைபெற உள்ள நிலையில், மின்சார பயன்பாட்டை மாதம்தோறும் கணக்கிடும் முறையை 6 மாதங்களுக்குள்
அமல்படுத்த மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் நிறைவேறினால் கண்டிப்பாக மீண்டும்
ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று கணக்குப் போட்டே முதல்வர் பேசியிருக்கிறார்.
இப்போது தமிழகத்தில் வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவசமாகவும்,
500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்கப்படுகிறது. மின் பயன்பாடு 2 மாதங்களுக்கு
ஒருமுறை கணக்கெடுக்கப்படுகிறது. சில ஊழியர்கள் கணக்கெடுக்க தாமதமாக வருவது, வீடுகளுக்கு
நேரில் செல்லாமல் உத்தேசமாக கணக்கெடுப்பது போன்ற காரணங்களால் அரசின் சலுகைகளை பெற முடியவில்லை.
எனவே, மாதம்தோறும் கணக்கெடுக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று நுகர்வோர்
பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையே தேர்தல் அறிக்கையில் தி.மு.க. வாக்குறுதியாகக்
கொடுத்தது.
சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளது. எனவே
இனியும் காலம் தாழ்த்த முடியாது என்று களத்தில் தி.மு.க. இறங்கியுள்ளது. தற்போது
3.04 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் திட்டத்துக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.
விரைவில் தகுதியான நிறுவனங்களுக்கு பணி ஆணை வழங்கி, மாதம்தோறும் கணக்கீடு செய்யும்
திட்டத்தை அடுத்த 6 மாதங்களுக்குள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது’’ என்கிறார்கள்.
ஏழை மக்களுக்கு நல்ல செய்தி.