Share via:
தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தை இழிவுபடுத்தும், ‘ஒற்றைப் பனைமரம்’
படத்தை தமிழகத்தில் திரையிடக் கூடாது என்று நாம் தமிழர் சீமான் பொங்கியெழுந்திருக்கிறார்.
’ஒற்றைப் பனைமரம் படத்திற்கு விளம்பரம் கொடுப்பதற்காகவே சீமான் இப்படி பேசியிருக்கிறார்.
விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கையில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தியது போன்று அவமானப்படுத்தும்
சீமானுக்கு இப்படி பேச உரிமையே இல்லை என்று படக்குழுவினர் கொதிக்கிறார்கள்.
இன்று ஒற்றை பனைமரம் குறித்து செந்தமிழன் சீமான், ‘’தாய் மண்ணின்
விடுதலைக்குப் போராடி தங்கள் இன்னுயிரை இழந்த மாவீரர்களின் ஈகத்தைக் கொச்சைப்படுத்தும்
யாதொரு பொய்ப்பரப்பரையையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஈழத்தில் நடைபெற்றது வெறும்
வன்முறை வெறியாட்டம் அல்ல; உலகத்தமிழர் உணர்வோடும், உயிரோடும் இரண்டற கலந்துவிட்ட விடுதலைப்போராட்டம்.
தந்தை செல்வா தலைமையில் நடந்த அகிம்சை போராட்டம் 30 ஆண்டுகாலம்
இனவாத இலங்கை அரசின் கொடும் அடக்குமுறைகளால் ஒடுக்கப்பட்டு தோல்வியடைந்த பிறகு, வேறுவழியின்றிதான்
தமிழினத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப்போராட்டம் என்பது
இனவெறி இலங்கை அரசால் தமிழர்களின் மேல் திணிப்பட்ட ஒன்றாகும்.
எதிரி எந்த மொழியில் பேசுகிறானோ அதே மொழியில் பதில் சொல்ல வேண்டிய
கட்டாயத்துக்கு தமிழர்கள் தள்ளப்பட்டனர் என்பதே வரலாற்றுப் பேருண்மை. போராடினாலும்
சாவோம்; போராடாவிட்டாலும் சாவோம்! ஆனால் போராடினால் ஒருவேளை வாழ்வதற்கு வாய்ப்பிருக்கிறது
என்ற காரணத்தாலேயே அடிமை வாழ்வினை விட உரிமைச்சாவு மேலானது என்ற உன்னதக் கோட்பாட்டை
ஏற்றே எம்மினச்சொந்தங்கள் ஈழத்தில் போராடி இன்னுயிரை ஈந்தனர்.
ஆகவே, ஈழவிடுதலைப் போராட்டத்தை இழிவுபடுத்தும் ‘ஒற்றை பனைமரம்’
திரைப்படத்தை தமிழ் மண்ணில் திரையிடக்கூடாது என திரையரங்க உரிமையாளர்களுக்கு நாங்கள்
அன்புடன் கோரிக்கை வைக்கிறோம். திரையரங்கங்களை முற்றுகையிட்டு போராடும் நிலைக்கு எங்களைத்
தள்ளமாட்டீர்கள் என்று உறுதியாக நம்புகிறோம்..’’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கு படக்குழுவினர், ‘’படத்தை மக்கள் பார்த்து உண்மையைப் பேசட்டும்.
ஆமைக்கறி, மான்வேட்டை என்று விடுதலைப்புலிகள் அசைவ ஹோட்டல் நடத்திக்கொண்டிருந்தார்கள்
என்றெல்லாம் நாங்கள் சொல்லவில்லை. படத்தைப் பார்க்காமலே பேசுவது அபத்தம். சீமான் எங்களுக்கு
இப்படி விளம்பரம் தேடிக் கொடுத்ததற்கும் புரமோஷன் செய்வதற்கும் சீமானுக்கு நன்றி’’
என்கிறார்கள்.