News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

பிப்ரவரி முதல் வாரம் ஜனநாயகன் கண்டிப்பாக ரிலீஸ் ஆகும் என்று ஆசைப்பட்ட விஜய் ரசிகர்கள் நொறுங்கும் அளவுக்குத் தீர்ப்பு வந்துள்ளது. அதேநேரம், கூட்டணிக்கு யாருமே இல்லாமல் தடுமாறிய விஜய்க்கு, ஒரு நல்ல செய்தியாக டாக்டர் ராமதாஸ் தூது அனுப்பியிருக்கிறார்.

விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சென்சார் பிரச்சினையில் சிக்கியது. பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருந்த ‘ஜனநாயகன்’ படத்தை பார்த்த தணிக்கை வாரியம், சென்சார் வழங்க மறுத்து மறு ஆய்வு செய்ய பரிந்துரை அளித்தது.

இதை எதிர்த்து, அப்படத்தை தயாரித்துள்ள கே.வி.என். நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி பி.டி.ஆஷா, உடனடியாக சென்சார் வழங்க உத்தரவிட்டு, மறுஆய்வு பரிந்துரையை ரத்து செய்தார்.

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து உடனடியாக மேல்முறையீடு செய்த தணிக்கை வாரியம், தனிநீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடையை பெற்றது. கடந்த 20ஆம் தேதி தலைமை நீதிபதி அமர்வில் மீண்டும் காரசார விவாதம் நடைபெற்றது. இந்த வழக்கு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை முதல் வழக்காக ஜனநாயகன் பட வழக்கை விசாரித்தது.

தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தா, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு தீர்ப்பை வாசித்தது. அப்போது, ‘தணிக்கை வாரியத்துக்கு உரிய அவகாசம் வழங்கப்படவில்லை. படத்தில் சில காட்சிகள் சமூகத்தில் பிரச்சனை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே சென்சார் போர்ட் தலைவர் படத்தை மறு ஆய்வு செய்வது அவசியம். சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மீண்டும் வழக்கை தனி நீதிபதி பி.டி.ஆஷாவே விசாரிக்க வேண்டும். விசாரணையில், தயாரிப்பு நிறுவனம் மற்றும் சென்சார் போர்டுக்கு உரிய அவகாசம் வழங்கி, புதிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்” என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து இப்போதைக்கு படம் வெளியாக வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது. இந்நிலையில், டாக்டர் ராமதாஸ் இப்போது விஜய் கட்சியில் கூட்ட்டணி பேசுவதாக செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார். இது, தவெக டீமில் சிறு வெளிச்சத்தைக் கொண்டுவந்துள்ளது.

டாக்டர் ராமதாஸிடம் சிக்கி விஜய் என்ன பாடுபடப் போகிறாரோ..?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link