Share via:
அண்ணாமலையை தமிழக பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து மாற்ற மாட்டார்கள்
என்ற நம்பிக்கையை, அண்ணாமலையே கொஞ்சம் கொஞ்சமாக உடைத்துவருகிறார். சமீபத்தில் மீடியாவிடம்
பேசிய அண்ணாமலை, ‘’தமிழக பாஜ தலைவர் ரேசில் நான் இல்லை’’ என்று அறிவித்தார். அதன் உச்சபட்சமாக
இப்போது, ‘நான் மோடிக்காகவே அரசியலுக்கு வந்தேன். அவர் கண்ணை மூடிக்கொண்டு கிணற்றில்
குதிக்கச் சொன்னாலும் அதற்குத் தயாராக இருக்கிறேன்’’ என்று கூறினார்.
இதையடுத்து தமிழ்நாட்டில் ஏதேனும் ஒரு கட்சிப் பதவியில் இருந்தால்
போதும் என்ற முடிவுக்கு அண்ணாமலை வந்துவிட்டார் என்பது தெளிவாகிவிட்டது என்கிறார்கள்.
இந்த நிலையில் பா.ஜ.க சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அந்த வாய்ப்பு
கிடைக்கும் என்று தெரிகிறது. சமீபத்திய மோடி விசிட்டில் நயினார் நாகேந்திரனுக்கு மேடையில்
முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
தமிழிசை செளந்தரராஜன், வானதி சீனிவாசன் ஆகியோர் தலைவர் பதவிக்கான
ரேசில் இருந்தாலும் இப்போதைக்கு நயினார் நாகேந்திரன் முன்னிலையில் இருப்பதாகத் தெரிகிறது.
இதையடுத்தே டெல்லி அழைப்பின் பேரில் நயினார் நாகேந்திரன் டெல்லி போயிருக்கிறார். இன்று
அவர் மோடி, அமித்ஷா மற்றும் தேசிய தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ் தலைவர்களை சந்தித்துப் பேசுகிறார்.
வரும் 10ம் தேதி அமித்ஷா சென்னைக்கு வந்து அனைத்து நிர்வாகிகளுடனும்
ஆலோசனை செய்கிறார். அதன் அடிப்படையில் வரும் 15ம் தேதிக்குள் நயினார் நாகேந்திரனுக்கு
தலைவர் பதவி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. அதேநேரம், அண்ணாமலைக்கும் முக்கியப்
பதவி கொடுக்கப்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். இந்த விவகாரத்தில் அண்ணாமலையும்
அவரது ஆதரவாளர்களும் கடும் அப்செட்டில் இருக்கிறார்கள்.