Share via:
எங்களைத் தவிர வேறு யாரும் விஜயகாந்த் போட்டோவை, வீடியோவை பயன்படுத்தக்கூடாது.
அப்படி விஜய்காந்த் படத்துடன் போஸ்டர், பேனர் இருந்தாலே உடனடியாக வழக்கு போடுவோம் என்று
பிரேமலதா பேசியிருந்தார். அவரை ஜெயலலிதா போன்று சித்தரிப்பு செய்திருப்பது கடும் சர்ச்சையை
உருவாக்கியுள்ளது.
சமீபத்தில் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார் பிரேமலதா. இதையடுத்து
அங்கேயும் பேரம் பேச வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படும் நிலையில், ஜெயலலிதாவுடன் பிரேமலதா உள்ளது போன்ற படத்தை திடீரென தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் பதிவிட்டுள்ளார். வேண்டுமென்றே
இந்த படம் பதிவிடப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றது. மாநிலங்களவை சீட் விவகாரத்தில் அதிமுக, தேமுதிக இடையே மோதல் உருவானது. ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டினர். இதையடுத்து யாருடனும் கூட்டணி இல்லை என்று பிரேமலதா அறிவித்தார். வரும் ஜனவரி மாதம் கடலூரில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் தான் கூட்டணி யாருடன் என்று அறிவிப்போம் என்றும் அறிவித்துள்ளார்.
நாங்கள் இடம்பெறும் கூட்டணிதான் வரும் தேர்தலில் வெற்றி பெறும் என்றும் பேசி வருகிறார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், கட்சியை பலப்படுத்தும் நோக்கில், உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற பெயரில் நடைபயணத்தையும் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அண்மையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை பிரேமலதா நேரில் சந்தித்து பேசினார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் குறித்தும் கேட்டறிந்தார். இதனால், திமுக பக்கம் தேமுதிக போகிறதா என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பிரேமலதா மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று பதில் அளித்திருந்தார்.
இதற்கிடையில் அண்மையில் திருப்பத்தூரில் பிரசாரம் மேற்கொண்ட பிரேமலதா, அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர். இந்நிலையில் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் தனது பேஸ்புக் பக்கத்தில் ஜெயலலிதாவுடன் பிரேமலதா இருக்கும் புகைப்படத்தை திடீரென பதிவிட்டுள்ளார். எல்.கே. சுதீஷின் இந்த பேஸ்புக் பதிவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஒரே நேரத்தில் பல கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பிரேமலதாவின்
வழக்கம். ஆனால், தன்னை ஜெயலலிதா போன்று காட்டிக்கொள்வதற்கு இப்படி படத்தை புரமோட் செய்வதாக
அவரது கட்சியினரே கூறுகிறார்கள். இந்த விவகாரத்தில் அதிமுக இன்னமும் கப்சிப் என்று
இருப்பதுதான் ஆச்சர்யம்.