Share via:
காவிரிப் படுகையில், அமராவதி (பம்பார்) துணைப்படுகையின் ஒரு பகுதியான
சிலந்தியாற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதாக சமீபத்தில் சில ஊடகங்களில்
வந்த செய்திகளின் காரணமாக, அமராவதி ஆற்றில் நீர்வரத்து வெகுவாகக் குறையும் என்று தமிழ்நாட்டு
விவசாயிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, இப்பணியினை நிறுத்தி வைக்க வேண்டுமென்று
வலியுறுத்தி கேரள முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.
இப்படி லெட்டர் அனுப்பினால் மட்டும் போதுமா என்று விவசாயிகளும்
எதிர்க்கட்சிகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமியில் இருந்து டிடிவி தினகரன்
வரையிலும் அத்தனை அரசியல் தலைவர்களும் இந்த விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்த பிறகே
ஸ்டாலின் லெட்டர் எழுதியிருக்கிறார்.
இந்த விவகாரத்திற்கு எடப்பாடி பழனிசாமி, ‘உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு
எதிராக, முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட அனுமதி கோரி மத்திய
அரசுக்கு கடிதம் எழுதியுள்ள கேரள அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். கூட்டணிக்
கட்சி என்று பாராமல், கும்பகர்ண தூக்கத்திலிருந்து விழித்து, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி
சட்ட நடவடிக்கை எடுக்க திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
உடனடியாக உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டும் என்றும் கடுமையாக எதிர்ப்பும்
போராட்டமும் நடத்தவேண்டும் என்பது விவசாயிகளின் விருப்பமாக இருக்கிறது. இத்தனை நாள்
கழித்து லெட்டர் மட்டும் எழுதுவது தட்டிக் கழிக்கும் வேலை என்று விவசாயிகள் எதிர்ப்பு
தெரிவிக்கிறார்கள்.