Share via:
விஜய் கட்சியின் இரண்டாம் ஆண்டு மாநாட்டில் மேடையேறிய பிரசாந்த்
கிஷோர், விரைவில் ஆட்சியைப் பிடிப்போம் என்று கூறினார். அவரே தனியார் தொலைக்காட்சிக்கு
அளித்த பேட்டியில் 5 முதல் 10 வருடங்கள் உழைத்தால் தான் பெரிய கட்சியாக முடியும் என்று
கூறியிருக்கிறார். இதையடுத்து விஜய் இலக்கு 2031 தேர்தல் தானா என்று அவரது கட்சியினர்
அதிர்ந்து நிற்கிறார்கள்.
தனியார் தொலைக்காட்சிக்கு பிரசாந்த் கிஷோர் கொடுத்த பேட்டியில்,
“அதிமுக + பாஜக கூட்டணி அமைத்தால், திமுக கூட்டணி அப்படியே தொடர்ந்தால் தவெக தனித்துப்
போட்டியிட்டால், விஜய்க்கு பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது. விஜய்யுடன் கூட்டணி அமைக்க
அ.தி.மு.க., விரும்புகிறது. ஆனால் அ.தி.மு.க., உடன் கூட்டணி அமைக்க த.வெ.க., விரும்பவில்லை.
தமிழகத்தில் பா.ஜ.க. அமோகமாக வளர்ந்துள்ளது. இப்போது ஆட்சியமைக்க
முடியாது என்றாலும் விரைவில் அதை நோக்கி நகர்கிறது. விஜய்க்கு இப்போது உள்ள சூழலில்
8 – 10% வாக்குகள் நிச்சயம் உள்ளது. அவர் தேர்தல் பிரசாரம் செய்யத் தொடங்கியதும் இந்த
வாக்கு வங்கி அதிகரித்துவிடும். பீகார் தேர்தலுக்குப் பிறகு தான் கூட்டணி குறித்து
முடிவு செய்யப்படும். ஒரு கட்சி 5 முதல் 10 வருடங்கள் கடினமாக உழைத்தால் மட்டுமே பெரிய
வாய்ப்பு கிடைக்கும். எப்படி என்றாலும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழகத்தில்
தனித்து போட்டியிட வேண்டும் என்பதே விஜய் முடிவு.’’ என்று பா.ஜ.க.வை சேர்ந்தவர் போலவே
பேசியிருக்கிறார்.
அ.தி.மு.க.வுடன் தேர்தல் கூட்டணி இல்லை என்று சொல்லியிருப்பதுடன்
இப்போது 8 முதல் 10% வாக்குகள் மட்டுமே உள்ளது என்றும் கூறியிருப்பதை வைத்து, விஜய்
இந்த தேர்தலை சீரியஸாக எடுத்துக்கொள்ளப் போவதில்லை என்றும் அடுத்த 2031 தேர்தலை இலக்கு
வைத்தே செயல்படுகிறார் என்றும் அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளத்தில் பேசி வருகிறார்கள்.
இந்த ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு
வெற்றி பெறவில்லை என்றால் அடுத்த 5 ஆண்டுகள் எப்படி கட்சியை நடத்த முடியும். கூட்டணிக்குப்
போய் விடலாம். தி.மு.க.வை அகற்றாவிட்டால் நமது கட்சியை சிதறடித்துவிடுவார்கள் என்று
கோரிக்கை வைக்கிறார்கள்.