Share via:
அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்த விண்ணப்பத்தின் மீது ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துகளை கேட்டு முடிவெடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ள விவகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு பா.ஜ.க.
வைத்துள்ள பலப்பரீட்சையாகவே பார்க்கப்படுகிறது.
திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்ய மூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில்,
‘அதிமுக தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகள் முடியும்வரை இரட்டை இலை சின்னத்தை
ஒதுக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்ததாகவும், ஆனால், மனு மீது எந்த
பதிலும் இதுவரை தேர்தல் ஆணையம் தரவில்லை. எனவே, தனது மனு மீது விசாரணை நடத்துவதற்கு
தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து சூர்ய மூர்த்தி மனு
தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவானது நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியம், குமரப்பன் அடங்கிய
அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள்,
“சூர்ய மூர்த்தியின் மனு தொடர்பாக அதிமுகவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு பதில் கிடைக்கப்பெற்றது.
இது சம்பந்தமாக விரைவில் முடிவெடுக்கப்படும்” என்று விளக்கமளித்தனர்.
அப்போது ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன்,
“இந்த விவகாரத்தில் தங்களது தரப்புக்கு நோட்டீஸ் எதுவும் அனுப்பப்படவில்லை. ங்களது
தரப்பையும் கேட்ட பின்னரே இந்த மனு மீது முடிவெடுக்க உத்தரவிட வேண்டும்” என கோரியதையடுத்து,
நான்கு வாரங்களில் சூர்ய மூர்த்தி தாக்கல் செய்த மனு மீது முடிவெடுக்க வேண்டும் என
தலைமை தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், ஓபிஎஸ் உட்பட அனைத்து
தரப்பு கருத்தினையும் கேட்டபின்பே முடிவெடுக்க வேண்டும் என்றும் கூறினர்.
இது வரை எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக முடிவெடுத்த தேர்தல் ஆணையம்
இனி எப்படி முடிவெடுக்கும் என்பது அ.தி.மு.க. தொண்டர்களை குழப்பமடையச் செய்திருக்கிறது.
இந்நிலையில் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான மருது அழகுராஜ், ‘’ஒரு கட்சியின் தலைமையை
அந்த கட்சியில் உள்ள பெரும்பான்மையான மாவட்டச் செயலாளர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும்
பொதுக்குழு உறுப்பினர்களுமே முடிவு செய்து கொள்ளலாம் என்றால்.. எதற்காக கட்சியின் சட்டவிதிகளின்படி
கட்சியின் அடிப்படை உறுப்பினர்களை கொண்டு தேர்தல் நடத்தி ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர்
பதவிகளை தேர்ந்தெடுத்தீர்கள்.
பொதுச்செயலாளர் பதவிக்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர்கள் என்கிற மாற்று
மாடத்தை உருவாக்கி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான A மற்றும் B படிவங்களில்
கையெழுத்திட்டு சின்னத்தை ஒதுக்கிட அனுமதி தருகிற உரிமையும் ஒருங்கிணைப்பாளர் மற்றும்
இணை ஒருங்கிணைப்பாளர் இருவருக்குமானது என்கிற ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. அப்படி
இருவரது கையொப்பத்தில் தான் தற்போதைய அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தலில்
போட்டியிட்டு தேர்வாகியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஆக ஒரு ஓட்டில் இருவர் தேர்வு என்பதாகவே ஒருங்கிணைப்பாளர் மற்றும்
இணை ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இருவரும் கட்சியின்
அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனை தேர்தல் ஆணையம் அங்கீரித்துள்ளது.
இவர்களது பதவிக்காலம் 2026 டிசம்பர் வரை என்றிருப்பதால் அந்த பதவிக் காலம் வரை இரட்டை
இலை சின்னத்திற்கு கையெழுத்திடும் உரிமை இருவருக்குமானதாகும். 2026 டிசம்பரில் மறுதேர்தல்
நடத்தி கட்சிக்கான புதுத் தலைமை தேர்வு செய்யப்படும் வரை ஒருங்கிணைப்பாளர்களான இருவருக்கும்
இரட்டை இலைச் சின்னத்தின் மீதான உரிமையை தேர்தல் ஆணையம் உறுதிப் படுத்துகிறது. இதனை
ஏற்க மறுக்கும் பட்சத்தில் இரட்டை இலைச் சின்னம் இருவருக்கு மட்டுமல்ல ஒருவருக்கும்
கிடையாது என்கிற உத்தரவை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
இப்படி ஒரு கறாரான ஆணையை தேர்தல் ஆணையம் இடும்பட்சத்தில் கழகத்தை
இரட்டை இலைச் சின்னமே ஒன்றுபடுத்தும் வாய்ப்பை உருவாக்கிவிடும். இதனையும் ஏற்க மாட்டேன்
என பிடிவாதம் பிடித்து கட்சியை பிளவு நிலையிலேயே வைத்து திமுகவுக்கு உதவிட எடப்பாடி
முற்பட்டால் அவரை இணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக
புதிதாக ஒருவரை தேர்வு செய்திட கால அவகாசத்தை தேர்தல் ஆணையத்திடம் கட்சி முன்வைக்க
வேண்டும்…’’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.
பா.ஜ.க. ஆட்சியில் வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை மட்டுமின்றி
தேர்தல் ஆணையமும் அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருப்பதாகவே எதிர்க்கட்சிகள் கடுமையாக
குற்றம் சாட்டுகிறார்கள். ஆகவே, எதுவும் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்பதே உண்மை.
அதேநேரம் எடப்பாடி பழனிசாமி தரப்பினர், ‘’இதுவரை பன்னீர்செல்வம்
காட்டிய பூச்சாண்டி எதுவுமே எடுபடவில்லை. இப்போதும் தேர்தல் ஆணையம் எங்களுக்கு சாதகமாக
தெளிவான தீர்ப்பையே தரும்’’ என்று உறுதியாகச் சொல்கிறார்கள். இரட்டை இலையை வைத்து மீண்டும்
அரசியல் ஆரம்பமாகியுள்ளது.