Share via:
எடப்பாடி பழனிசாமி
கொலைக் குற்றவாளி..? வம்புக்கு இழுக்கும் அண்ணாமலை
எடப்பாடி பழனிசாமிக்கும்
அண்ணாமலைக்குமான மோதல் எக்குத்தப்பாக மாறிவருகிறது. எடப்பாடி பழனிசாமியை ஒரு கொலைக்
குற்றவாளி என்று பொதுக்கூட்டத்தில் பேசி பெரும் பஞ்சாயத்தைக் கூட்டியிருக்கிறார் அண்ணாமலை.
சென்னை பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில்
பேசிய அண்ணாமலை, ‘’ இன்று
திமுக பழனியை நோக்கிப் படையெடுக்கிறது.
பழனி முருகன் அசாதாரணமான கடவுள்.
ஆண்டி கோலத்தில் இருக்கும் முருகப்
பெருமான், அரசியலுக்காகப் பயன்படுத்தினால், மண்ணோடு மண்ணாக ஆக்கிவிடுவார்.
சனாதன தர்மத்தை அழிப்போம் என்று
கடந்த ஆண்டு சொன்னவர்கள், இன்று
பழனிக்குப் பால் காவடி எடுக்கிறார்கள்.
கடந்த எழுபதாண்டுக் காலமாகத் தமிழ்க் கலாச்சாரத்தைச்
சீரழித்தவர்களுக்கு, ஆண்டி கோலத்தில் இருக்கும்
முருகப் பெருமான் நிச்சயம் அதற்கான
தண்டனையைக் கொடுப்பார். என்னைப் பொறுத்தவரை, திமுக,
அதிமுக இரண்டு கட்சிகளும் ஒன்றுதான்.
இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் எந்த
வித்தியாசமும் இல்லை. தமிழகத்தில் இரண்டு
திராவிடக் கட்சிகளையும் அகற்ற, பாஜகவால் மட்டும்தான்
முடியும். அதற்காகத்தான் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.
அதிமுகவின்
எடப்பாடி
பழனிசாமி அவர்கள், என்னைக் குறித்துப்
பேசியிருக்கிறார். அன்றைய அமைச்சர் ஒருவரின்
துணையால் கொலை வழக்கிலிருந்து தப்பித்தவர்,
எனக்கு நேர்மை, நியாயம் குறித்துப்
பாடம் நடத்த வேண்டாம்.
புரட்சித்
தலைவர் அமரர் எம்ஜிஆர், புரட்சித்
தலைவி அம்மா ஜெயலலிதா ஆகியோரின்
கட்சியை, கூவத்தூரில் எடப்பாடி பழனிசாமி நடத்திய
விதம், அலங்கோலம் என்பதை அவரால்
மறைக்க முடியாது. சட்டமன்ற உறுப்பினர்களுக்குப்
பணம் கொடுத்து, காலில் விழுந்து
பதவி வாங்கிய அவருக்கு, காவல்துறையில்
நேர்மையாகப் பணி செய்த விவசாயியின்
மகனான என்னைப் பற்றிப் பேச
என்ன தகுதி இருக்கிறது? வரும்
2026 தேர்தலில், எடப்பாடி
பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்கு நான்காவது இடம் கூடக்
கிடைக்காது…’’ என்று நேரடியாக அட்டாக் செய்திருக்கிறார்.
இதுவரை அரசியல் ரீதியாகப்
பேசிவந்த அண்ணாமலை, முதன்முறையாக கூவத்தூர் மற்றும் கொலைக் குற்றவாளி என்றெல்லாம் பேசியிருப்பது
கடும் அதிர்வுகளை உருவாக்கியிருக்கிறது. என்ன எதிர்விளைவுகள் என்று பார்க்கலாம்.