Share via:
அதிமுகவின் மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து ராயப்பேட்டையில்
உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடத்தப்பட்ட ஆலோசனைக் குழுக் கூட்டத்திற்கு எடப்பாடி
பழனிசாமி போட்ட ஒரே ஒரு கண்டிஷன், யாரும் ஒருங்கிணைப்பு குறித்து பேசக் கூடாது என்பது
தான். அதனாலே, அத்தனை பேரும் வலுவான கூட்டணி குறித்து வலியுறுத்தினார்கள்.
இப்போது பன்னீர்செல்வம் மட்டுமின்றி ஓபிஎஸ் அணியில் இருந்த ஜேசிடி
பிரபாகர், புகழேந்தி ஆகியோர் கேசி பழனிச்சாமியோடு இணைந்து அதிமுக ஒருங்கிணைப்புக் குழு
என்பதை நிறுவி, ஒன்றிணைப்பு குறித்து தொடர்ந்து பேசி வருகிறார்கள். ஆனாலும் எடப்பாடி
பழனிசாமி இந்த விஷயத்தில் ரொம்பவே பிடிவாதமாக இருக்கிறார்.
இதற்கான காரணம் குறித்து விசாரித்தோம். ‘’கடந்த சில தினங்களுக்கு
முன்பு, செங்கோட்டையன் வீட்டு விழாவில் அதிமுகவின் முக்கியமான நிர்வாகிகள் எடப்பாடி
பழனிசாமியுடன் தீவிரப் பேச்சுவார்த்தையில் இறங்கினர். அதிமுக ஒன்றிணைந்தால் மட்டுமே
தேர்தலில் வெற்ற பெற முடியும் என அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், இதற்கு
எடப்பாடி பழனிச்சாமி இறங்கி வரவில்லை.
இந்த மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு வெற்றியைத் தேடி தந்தது
பலமான கூட்டணிதான். அதனால்தான், 2026-ம் ஆண்டுக்குள் பலமான கூட்டணியை அமைக்க திட்டமிட்டிருக்கிறார்
பழனிசாமி. இதே கருத்தை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திலும் பேசியிருக்கிறார்.
கடந்த தேர்தலில் பாமகவை அதிமுக கூட்டணிக்குள் கொண்டுவர திட்டமிடப்பட்டது.
ஆனால், பாஜகவுடன் கூட்டணி அமைத்தது பாமக. ஆகவே, 2026-ல் பாமகவைக் கூட்டணிக்குள் கொண்டுவர
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்ததாக சொல்லப்பட்டது.
அதேபோல், திமுகவில் கூட்டணியில் இருக்கக் கூடிய கட்சிகளைத் தங்கள்
பக்கம் இழுக்கவும் அதிமுக திட்டமிட்டது. கடந்த தேர்தலின்போதே அதற்கான வேலைகளைச் செய்தது
அதிமுக. குறிப்பாக, அதிமுக தூது அனுப்பியதை மேடையிலேயே போட்டு உடைத்தார் விசிக கட்சித்
தலைவர் திருமாவளவன். ஆனால், அப்போது பழனிசாமியின் வியூகம் கைகொடுக்கவில்லை. ஆனாலும்
தொடர் முயற்சி நடைபெறுகிறது.
அதிமுக ஒருங்கிணைந்தால் தன் தலைமைக்கு ஆபத்து ஏற்படும் என நினைக்கிறார்
பழனிசாமி. ஒருங்கிணைப்புக்குப் பின் அதிமுகவுக்கு வெற்றி கிடைத்தால் பிற தலைவர்களின்
வருகைதான் காரணம் என்னும் கருத்து முன்வைக்கப்படும். அதுமட்டுமில்லாலம், பிறரின் கை
கட்சிக்குள் ஓங்க வாய்ப்பிருக்கிறது. அதனால், தனியாளாக நின்று இந்தக் கூட்டணி கணக்கை
வெற்றியடைச் செய்ய வேண்டுமென நினைக்கிறார்.
சசிகலா, தினகரன், பன்னீர் என யார் உள்ளே நுழைந்தாலும் ஆட்சி அதிகாரத்தில்
பங்கு கேட்பார்கள். இந்த அதிகாரப் பகிர்வு தேவையில்லாத சிக்கலை ஏற்படுத்தும். மேலும் இவர்கள் மூவரையும் பா.ஜ.க.வே இயக்கிவருகிறது. உள்ளே
நுழைந்ததும் தன்னுடைய கூட்டணிக் கணக்கு எடுபடாது. மீண்டும் பா.ஜக.வின் கைப்பாவையாக
செயல்பட வேண்டியிருக்கும் என்பதாலே ஒருங்கிணைப்பை ஏற்க மறுக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
இவர்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டால் பாஜக துணையோடு மீண்டும்
தலைமை பதவிக்காக ஏதேனும் முயற்சிகள் எடுப்பார்கள். மீண்டும் அதிமுகவில் தலைமை பதவிக்கான
யுத்தம் வந்துவிடும் அதனால் வெற்றியோ தோல்வியோ இவர்களை கட்சியில் இணைத்துக்கொள்ளக்கூடாது
என்பதில் உறுதியாக இருக்கிறார்’’ என்கிறார்கள்.