Share via:
தமிழகத்தில் கடந்த
நாடாளுமன்றத் தேர்தலில் அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க. தனித்துப் போட்டியிட்டு படுதோல்வி
அடைந்தது. எனவே, அவரை மாற்ற வேண்டும் என்றும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து சட்டமன்றத்
தேர்தலை சந்திக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, இம்மாதம்
இறுதியில் அண்ணாமலை இங்கிலாந்து நாட்டுக்குப் படிக்கச் செல்வதாகவும் அதுவரை இடைக்காலத்
தலைவர் நியமனம் செய்யப்படுவார் என்றும் கூறப்பட்டது. ஆனால், தொடர்ந்து தமிழக பா.ஜ.க.
தலைவராக செயல்படுவதற்கு விரும்புகிறார். எனவே, இங்கிலாந்து நாட்டில் ஏற்பட்டுள்ள கலவரத்தை
சுட்டிக்காட்டி படிப்பை கைவிடப் போவதாக செய்திகள் வெளியாகின்றன.
தற்போது இங்கிலாந்தில்
மூன்று சிறுமிகள் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து,
இங்கிலாந்தின் பல பகுதிகளில் போராட்டம், கலவரம் நடந்து வருகிறது. வன்முறை சம்பவங்களும்
நடந்து வருகின்றன. இதனால், இந்தியர்கள் கவனத்துடன் இருக்குமாறு லண்டனில் இருக்கும்
இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த அறிக்கையை தனது
டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அண்ணாமலையின் சகாவான அமர்பிரசாத் ரெட்டி, ‘இங்கிலாந்துக்கு
பயணம் செய்வது தற்போது உள்ள நிலையில் பாதுகாப்பானதாக இல்லை’ என்று அண்ணாமலைக்காக பதிவு
போட்டிருக்கிறார்.
ஏதேனும் காரணம் காட்டி
இங்கிலாந்து பயணத்தை ரத்து செய்து விட்டால், தமிழக பா.ஜ.க. பதவியை தக்கவைத்துக்கொள்ளலாம்
என்று அண்ணாமலை தீவிரம் காட்டுகிறார். அதேநேரம், அண்ணாமலையை எப்படியாவது இங்கிருந்து
அனுப்ப வேண்டும் என்று சீனியர்கள் தீவிரம் காட்டுகிறார்கள்.
அதேநேரம், ஆளும்
தி.மு.க.வினர் அண்ணாமலை தொடர்ந்து பதவியில் இருக்க வேண்டும் என்றே ஆசைப்படுகிறார்கள்.
அப்போது தான் அ.தி.மு.க.வுடன் கூட்டணி ஏற்படாது. மும்முனைப் போட்டியில் எளிதாக வெற்றி
பெற முடியும் என்று நினைக்கிறார்கள். எனவே, இந்த செய்தியைக் கேட்டு குஷியாகியிருக்கிறார்கள்.