Share via:
அரசியல் படிப்பதற்காக அண்ணாமலை லண்டனுக்குச் செல்வதாக கூறப்படும்
விவகாரம், அவரை தமிழக அரசியலில் இருந்து நிரந்தரமாக அப்புறப்படுத்தும் விஷயம் என்று
சீனியர்கள் குஷியில் இருக்கிறார்கள்.
ஆனாலும், ‘அண்ணாமலை லண்டன் கோர்ஸ் முடிச்சதும் தமிழகம் திரும்பி
புதிய ஸ்கெட்ச் போட்டு தமிழக முதல்வரா ஆயிடுவார்’’ என்று அவரது வார் ரூம் தினமும் புதுப்புது
தகவல்களை வெளியிட்டு அவரது ஆதரவாளர்களை குஷிப்படுத்தி வருகின்றனர்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சார்பில் சர்வதேச அரசியல் படிப்புக்காக
இந்தியாவில் இருந்து 12 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் பாஜ தலைவர்
அண்ணாமலையும் ஒருவர் என்றும் கூறப்படுகிறது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் செவனிங் உதவித் தொகை மூலம் சர்வதேச
அரசியல் என்ற தலைப்பிலான படிப்பை பயில அண்ணாமலை மூன்று மாதங்கள் இங்கிலாந்து செல்ல
உள்ளார். அவரின் இந்த படிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்குகிறது. அங்கு தங்கிப்
படிப்பதற்கான செலவை பல்கலைக்கழகமே ஏற்றுள்ளது. இதனால், அவர் 6 மாதம் அங்கேயே தங்கியிருப்பார்
என்று கூறப்படுகிறது.
இதையடுத்து மேற்படிப்பிற்காக லண்டன் செல்ல அனுமதி கேட்டு பாஜ மேலிடத்திற்கு
அண்ணாமலை கடிதம் எழுதியிருந்தார். தற்போது வரை அவரது கடிதம் மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை
என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் அண்ணாமலை படிப்பிற்காக லண்டன் சென்றால், பொறுப்பு
தலைவர் நியமிக்கப்படுவாரா அல்லது அண்ணாமலை மாற்றப்பட்டு புதிய தலைவர் நியமிக்கப்படுவாரா
என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால், மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜ கூட்டணி ஒரு
இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. கூட்டணி அமைத்திருந்தால் சில இடங்களை பிடித்து இருக்கலாம்
என்று பாஜவில் உள்ள தலைவர்களான தமிழிசை சவுந்தரராஜன் போன்றவர்கள் வெளிப்படையாக கருத்து
தெரிவித்தனர். இதனால், கட்சிக்குள் அண்ணாமலை ஆதரவாளர்களுக்கும், தமிழிசை ஆதரவாளர்களுக்கும்
இடையே கடும் மோதல் உருவானது.
ஒருவரை ஒருவர் சமூக வலைத்தளங்களில் கடுமையாக தரக்குறைவான வார்த்தைகளால்
மோதிக்கொண்டனர். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து, திருச்சி சூர்யா, கல்யாணராமன்
போன்றவர்களின் பதவிகள் பறிக்கப்பட்டன. நீக்கப்பட்ட திருச்சி சூர்யா அண்ணாமலை குறித்து
அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றார்.
இந்நிலையில், அண்ணாமலை வெளிநாடு செல்வதால் கட்சிக்கு புதிய தலைவர்
நியமிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பொறுப்பு தலைவர் நியமிக்கப்பட்டு பின்னர்
அண்ணாமலை நிரந்தரமாக மாற்றப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
அதேநேரம் அண்ணாமலை படிப்பு சந்தேகம் கிளப்புவதாக உடன்பிறப்புகள்
கூறுகிறார்கள். சர்வதேச அரசியல் படிப்பு என்பது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இரண்டு
வார படிப்பாக மட்டுமே சொல்லித்தரப் படுகிறது. இதற்கு உதவித் தொகை கிடையாது. இது தவிர
12 வார படிப்பு மட்டுமே இருக்கிறது. ஆனால், அது சர்வதேச அரசியல் தொடர்பான படிப்பு இல்லை
என்று ஆதாரமும் காட்டுகிறார்கள்.
இந்த நிலையில் அண்ணாமலை நடத்திவரும் வார் ரூமுக்கு முதலில் மூடுவிழா
நடத்தப்பட இருப்பதாக செய்திகள் வருகின்றன. அப்படியென்றால் அண்ணாமலை அரசியல் அம்புட்டுத்தானா..?