Share via:
அமரன் படத்தின் நாயகன் ஒரு பிராமணர் என்பதைக் காட்டாமல் திட்டமிட்டு
ஏமாற்றினார்கள் என்ற சர்ச்சையே இன்னமும் முடிவுக்கு வராத நிலையில் முகுந்த் போர்க்
குற்றவாளி என்ற அடுத்த சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்துப் பேசிய திருமுருகன் காந்தி
மீது பா.ஜ.க.வினர் கடுமையாகப் பாய்ந்து தாக்குதல் நடத்திவருகிறார்கள்.
அமரன் படம் குறித்துப் பேசிய திருமுருகன் காந்தி, ‘’’அமரன்’ திரைப்படத்தின்
ஒரு காட்சியில் ஆயுதமற்ற குற்றவாளி வில்லனை கைது செய்யாமல், ‘இந்திய இராணுவத்தின் முகத்தை
பார்’ என சொல்லி சுட்டுக்கொலை செய்வதாக சினிமா காட்சி அமைத்திருந்தார்கள். ஒரு ராணுவம்
இப்படியாக ஆயுதமற்ற – காயமடைந்த எதிரியை கொல்லக் கூடாதென்பது இராணுவ சட்டங்களும், சர்வதேச
சட்டங்களும் சொல்கின்றன. இதை மீறினால் போர்க்குற்றம் எனப்படும் குற்றச்சாட்டு சுமத்தப்படும்,
ஆகவே இப்படியான சினிமா காட்சி உண்மையானதா அல்லது சினிமாவிற்காக அமைக்கப்பட்டதா எனும்
கேள்வியினை அமரன் திரைப்பட இயக்குனரை நோக்கி எழுப்பினோம்.
இதற்கு இயக்குனர் பதில் சொல்லாமல் நழுவிவிட்டார். காரணம்,’..முகுந்த்
வரதராஜன் இப்படியாக சுடவில்லை, இது என்னுடைய கற்பனை..’ என இயக்குனர் சொன்னாரென்றால்,
முகுந்த் வரதராஜனை குற்றவாளியாக்கியது தான்தான் என பொறுப்பேற்க வேண்டும் என்பதால் அவர்
பதில் பேசாமல் கடந்து சென்றுவிட்டார்.
ஆனால், ‘முகுந்த்வரதராஜன் ஒரு போர்க்குற்றவாளி..’ என விமர்சிக்கப்பட்டதாக
சங்கிகளே பொய்-பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளனர். முகுந்த்வரதராஜனை குற்றவாளியாக காட்டி
வீடியோ, மீம்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாம் திரைப்படத்தின் இயக்குனரையும்,
தயாரிப்பாளரையும் நோக்கி கேள்வி கேட்டோம். ஆனால் இக்கேள்விகளை முகுந்த் வரதராஜனை நோக்கி
திருப்பி அவரை இழிவுபடுத்துகின்றனர். இதுதான் ஆரிய – சங்கி சூழ்ச்சி’’ என்று கூறியிருந்தார்.
இதற்கு பா.ஜ.க.வின் வினோஜ் பி.செல்வம், ‘’வாய்க்கு வந்தபடி உளறி
கொண்டிருக்கும் அரைக்கிறுக்கன் திருமுருகன் காந்தியை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ்
தமிழக காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும். நம் தேசத்திற்காக உயிர் தியாகம் செய்த
மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களை போர்க்குற்றவாளி என்ற ரீதியில் இந்த நபர் விமர்சிப்பதை
வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க கூடாது. முகுந்த் மீது பெருமதிப்பு கொண்ட அவரது குடும்பத்தினரையும்,
நாட்டு மக்களையும் புண்படுத்திக் கொண்டிருக்கிறார்’’ என்று புகார் எழுப்பியிருக்கிறார்,
பா.ஜ.க. டீம் இப்போது திருமுருகன் காந்தி மீது வன்மத்தைக் கக்கி
வருகிறார்கள். ஒரு சினிமாவில் எத்தனை அரசியல்?